கிராமப்புறங்களில் புடலங்காய் உணவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. கூட்டு, பொரியல், குழம்பு, துவையல் என நம் வீட்டு சமையலில் முக்கிய இடம்பெறும் புடலங்காய் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதை சமைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நன்கு முற்றிய புடலங்காயை தவிர்த்துவிட்டு பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ந்த காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
சாப்பிடும் உணவு சரிவர ஜீரணமாகாமல் அஜீரணக் கோளாறுகளால் அவதிப்படுகிறவர்கள் தினமும் புடலங்காய் கூட்டு , பொரியல் என உணவில் ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்ள அஜீரணக் கோளாறுகள் காணாமல் போகும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள, குடல் புண்கள் விரைவில் ஆறும். அல்சர் பிரச்னையும் சரியாகும். தொண்டைப் புண்ணால் அவதிப்பட்டு வருகிறவர்களும் தினமும் உணவில் புடலங்காயை சேர்த்துக்கொள்ள நோயின் தீவிரம் குறையும். அத்துடன் தொண்டைப் புண் சீக்கிரமே குணமாகும். இக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள நரம்புகள் பலம் பெறும். நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் கற்பக மூலிகை புடலங்காய் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அத்துடன் இது சிறுவர், சிறுமியர்களின் ஞாபகத் திறனை அதிகரிக்கும் என்பதால் சிறுவர்கள் அடிக்கடி புடலங்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்களின் நலன் காக்கும் இக்காய், அவர்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். மேலும், கருப்பை கோளாறுகளையும் குணப்படுத்தும் என்கிறார்கள். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வர, மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.
எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்து வர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்குக் கிடைக்கும். கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250 கிராம் எடுத்து 300 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200 மி.லி. குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்.
புடலங்காய் ஆண்மை கோளாறுகளை சரி செய்யும் தன்மையையும், ஆண் - பெண் உறவை பெருக்கும் வல்லமையையும் கொண்டுள்ளது. மிகவும் மெலிந்த தோற்றத்தில் ஒல்லியாக இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்துக்கொள்ள உடலில் சதை பிடிக்கும். அதிக உடல் சூட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
இதயக் கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கும். புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மை போல அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.