அரிசியில் உள்ள 'விஷத்தை' நீக்குவது எப்படி? முன்னோர்கள் காட்டிய எளிய வழி!

Rice
Rice
Published on

தமிழர்களின் பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தில் அரிசி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் நமது அன்றாட உணவின் அடிப்படைப் பொருளாக உள்ளது. குறிப்பாக அரிசியை ஊற வைத்து சமைக்கும் பழக்கம் நம் முன்னோர்களால் ஏற்பட்ட ஒரு அறிவியல் அடிப்படையிலான நடைமுறையாகும். இந்த முறையால் உணவின் ஊட்டச்சத்து அதிகரிப்பதோடு, உடல்நலத்திற்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அந்த பயன்களை பற்றி பார்க்கலாம்...

வயல்களில் இருக்கும் நெல் மணிகள் பூச்சிகள் தாக்கி அழுகி போகாமல் இருக்க அந்த நெல் மணியின் மேல் ஒரு பாதுகாப்பு கவசம் இருக்கிறது. அதுபோல அந்த நெல் மணியின் உள்ளிருக்கும் அரிசியை பாதுகாக்க ஒவ்வொரு அரிசியிலும் இயற்கையாக இருக்கும் அமிலம் அரிசியை அழியாமல் பாதுகாக்கிறது. அரிசியை வேக வைக்கும் போது அரிசியில் உள்ள இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற சத்துக்களை நம் குடலில் உறிஞ்ச விடாமல் அதில் உள்ள phytic acid (அமிலம்) தடுக்கிறது.

அரிசியை ஊற வைத்து சமைப்பதன் முக்கிய பயன்கள்:

1.செரிமானம் எளிதாகும்

அரிசியை ஊற வைப்பதனால் அதன் வெளிப்புறக் கடினத்தன்மை குறைகிறது. இதனால் சமைத்த பின் அரிசி மென்மையாகி, வயிற்றில் எளிதாக செரிகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

2. ஊட்டச்சத்து உறிஞ்சும் திறன் அதிகரிப்பு

ஊற வைக்கும் போது அரிசியில் உள்ள பைட்டிக் ஆசிட் (Phytic acid) அளவு குறைகிறது. இது உடலில் இரும்பு, சிங்க், கால்சியம் போன்ற தாதுக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் ஒரு பொருள். இதன் அளவு குறைவதால், உடல் ஊட்டச்சத்துகளைச் சிறப்பாக உறிஞ்ச முடிகிறது. அதனால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. எலும்புகள் வலிமை அடைகிறது.

3. சமைக்கும் நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பு

ஊற வைத்த அரிசி விரைவாக வேகுவதால், சமைக்கும் நேரம் குறைகிறது. இதனால் எரிவாயு, மின்சாரம் அல்லது மர விறகு போன்ற எரிபொருட்களும் சேமிக்கப்படுகின்றன. இது வீட்டுச் செலவைக் குறைப்பதோடு சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

4. அரிசியின் சுவை மற்றும் மணம் மேம்பாடு

ஊற வைத்த அரிசி சமைக்கும் போது அதன் இயல்பான மணமும் சுவையும் நன்கு வெளிப்படும். சாதம் மென்மையாகவும் சிதறாமல் இருப்பதால், உணவின் தரம் உயர்கிறது.

5. வயிற்றுப்புண் மற்றும் அமிலத்தன்மை குறைவு

ஊற வைத்த அரிசி மென்மையான தன்மை கொண்டதால், வயிற்றுச் சுவரை எரிச்சலடையச் செய்யாது. இதனால் அமிலத்தன்மை, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்னைகள் குறைகின்றன.

6.பாரம்பரிய நலவாழ்வு அறிவு

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அரிசியை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் சாதமாக அல்லது கஞ்சி ஆக பயன்படுத்தினர். இதனால் உடலுக்கு குளிர்ச்சி, சக்தி மற்றும் நீடித்த ஆற்றல் கிடைத்தது. இது நவீன அறிவியலும் ஏற்றுக் கொள்ளும் உண்மை.

7.கழிவுப் பொருட்கள் குறைவு

ஊற வைக்கும் போது அரிசியில் இருக்கும் சில தேவையற்ற கழிவுப் பொருட்கள் நீரில் கரைகின்றன. அந்த நீரை வடித்துப் பயன்படுத்துவதால், சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவைப் பெற முடிகிறது.

அரிசியை ஊற வைத்து சமைப்பது என்பது ஒரு சாதாரண சமையல் முறையல்ல; அது ஆரோக்கியம், அறிவியல் மற்றும் பாரம்பரியம் ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு சிறந்த நடைமுறையாகும். செரிமானம் எளிதாகுதல், ஊட்டச்சத்து அதிகரிப்பு, சுவை மேம்பாடு, எரிபொருள் சேமிப்பு போன்ற பல நன்மைகள் இதன் மூலம் கிடைக்கின்றன. ஆகவே, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த பழக்கத்தை மீண்டும் கடைப்பிடிப்பதன் மூலம், ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com