குளிர்காலம் என்றாலே அனைவருக்கும் பிரச்னைதான். அதிலும் கடுமையான குளிரில் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், நமது மனநிலையிலும் எக்கச்சக்க மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய பருவகால பாதிப்புகள் நம் மனநிலையை பாதித்து மனச்சோர்வை உண்டாக்கலாம். எனவே, இத்தகைய மனச்சோர்வை எதிர்த்து போராடும் ஆரோக்கியமான உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கீரைகள்: உங்களுக்கு மனச்சோர்வு இருந்தால் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கீரை, முட்டைகோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் நிறைந்துள்ள மக்னீசியம் மற்றும் ஃபாலேட் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், வைட்டமின்களும் நம் நரம்பியல் தொகுப்பிற்கு பலம் சேர்ப்பவையாகும். இதனால் மனச்சோர்வால் ஓய்வின்றி தவிப்பவர்களுக்கு தூக்கம் மற்றும் ஓய்வை இவை கொடுக்கும்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் மனநிலைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, இதில் விட்டமின் பி6 நிறைந்துள்ளதால் மனநிலையில் ஏற்படும் சமநிலையின்மையை சீர் செய்ய உதவும். இதில் உள்ள இயற்கையான சர்க்கரை விரைவான ஆற்றலைக் கொடுத்து நம்மை சோர்விலிருந்து விடுபட வைக்கிறது.
முழு தானியங்கள்: முழு தானியங்கள் நம் மனதின் திறனை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் உள்ள கார்போஹைட்ரேட் கலவைகள் நம் உடலில் உண்டாகும் செரட்டோனின் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. மேலும் இவற்றிலிருந்து நிலையான ஆற்றல்கள் வெளியேறுவதால் மனநிலையை சிறப்பாக மாற்றும் தன்மை கொண்டதாகும்.
டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட் ஒரு சிறந்த மனநிலையை சிறப்பாக மாற்றும் உணவாகும். டார்க் சாக்லேட்டில் மனச்சோர்வை குறைக்கும் செரட்டோனின் நிறைந்துள்ளது. மேலு,ம் இதில் உள்ள சில கெமிக்கல்களும் மனச்சோர்வைக் குறைப்பதாகச் சொல்லப்படுகிறது.
எனவே, பருவகால மாற்றத்தால் மனச்சோர்வு பிரச்னையை சந்திப்பவர்கள் இத்தகைய உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக மனச்சோர்வு பாதிப்பிலிருந்து விடுபடலாம். அதே நேரம் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே நம்முடைய மனப்பிரச்னைகள் விரைவில் சரியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.