உருளைக்கிழங்கு வில்லங்கமான உணவா?

Are potatoes a dangerous food?
Are potatoes a dangerous food?

ருளைக்கிழங்கை, ‘காய்கறிகளின் அரசன்’ என்று குறிப்பிடுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான காய்கறிகளில் உருளைக்கிழங்கும் நிச்சயமாக இடம்பெறும். வறுவல் முதல் பிரெஞ்ச் ஃப்ரைஸ் வரை உருளைக்கிழங்கை கொண்டு தயாரிக்கப்படும் எல்லா ரெசிபிக்களுமே ஹிட்தான். ஆனால், சுவை நிறைந்த இதை ஒருசிலர் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள தயங்குகிறார்கள். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள். காரணம், அதிலுள்ள மாவுச்சத்து.

உண்மையில் 175 கிராம் உருளைக்கிழங்கில் கலோரி 116ம், கார்போஹைட்ரேட் 31 கிராமும், கொழுப்பு 0.5 கிராமும் உள்ளன. ஆனால், இதே அளவு அரிசியில் கலோரி 248ம், கார்போஹைட்ரேட் 37 கிராமும், கொழுப்பு 2.3 கிராமும் உள்ளன.

உருளைக்கிழங்கை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால், எவ்வித தயக்கமும் இன்றி உருளைக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். உருளைக்கிழங்கில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சத்துக்களை இப்போது தெரிந்துகொள்வோம்.

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகளை தவிர, வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி6 மற்றும் சி போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை நரம்பு மண்டலத்தையும், இதயத்தையும் பாதுகாக்கும் தன்மையுடையவை. உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தது என்பது நாம் அறிந்ததே. ஆனால், உருளைக்கிழங்கில் பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், கால்சியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

மேலும், இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் C, வைரஸ் தொற்று ஏற்படாதவாறு நம்மைப் பாதுகாத்து ஆரோக்கிய நன்மை தரும். அதோடு இதில் காரோட்டினாயிட்ஸ், பிளோவினாயிட்ஸ், காபிக் ஆசிட் எனும் நோய் எதிர்ப்பு சக்தியையும் புற்றுநோய் காரணிகளை அழிக்கும் ஆற்றல்மிக்க படாடீன் புரதமும் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உருளைக்கிழங்கில், ‘குகோமைன்ஸ்’ எனும் இரசாயன சத்து உள்ளது. இது உடலிலுள்ள இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது என்று கண்டறிந்துள்ளனர். இந்தப் பொருளுக்கு தூக்க வியாதிகளையும் சரி செய்யும் ஆற்றல் உள்ளது என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் இன்ஸ்டிடியூட் ஆப் புட் அண்டு ரிசர்ச் ஆராய்ச்சியாளர்கள்.

உருளைக்கிழங்கில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலுக்கு அதிக நன்மைகளை செய்கிறது. இவை உடலிலுள்ள செல்கள் சிதைவதை வெகுவாக குறைத்து செல்களின் நீண்ட நாள் வாழ்வுக்கு உதவுகின்றன என்கிறார்கள் அமெரிக்காவின் போஸ்ட்வானா பல்கலைக்கழக ஆய்வாளர்கள். உருளைக்கிழங்கு டைப் 2 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பை 24 சதவீதம் குறைப்பதுடன், கெடுதல் தரும் கொழுப்பை 26 சதவீதம் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

உருளைக்கிழங்கில் உள்ள மெக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் வலுவான எலும்புகளைப் பெற உதவுகின்றன. இதனை சரியான முறையில் எடுத்துக்கொள்ளும்பொழுது மூட்டு வலி போன்ற உடல்நல பிரச்னைகளையும் குறைக்கலாம். உருளைக்கிழங்கு சாப்பிடுவது எலும்பு மெலிதல் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த நோய்களின் அறிகுறிகளையும் குறைக்கிறது.

பெரும்பாலும் உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் உடம்பில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் இது கொலஸ்ட்ராலை அதிகரிக்காது. உருளைக்கிழங்கை சமைக்கும்பொழுதோ அல்லது பொறிக்கும் பொழுதோ அதிக எண்ணெய் பயன்படுத்துவதால்தான் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பின் அளவுகள் அதிகரிக்கலாம். இதை தவிர்க்க உருளைக்கிழங்கை வேக வைத்தோ அல்லது குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி, சரியான முறையில் சமைத்தோ சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இது வயிறு சார்ந்த பிரச்னைகளை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நல்ல செரிமானத்திற்கும், மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபடவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
அதிகம் எண்ணெய் நிறைந்த உணவுகளுக்குப் பின் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்! 
Are potatoes a dangerous food?

உருளைக்கிழங்கில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. அதேவேளையில் ஒரு நாளைக்குத் தேவையான அளவில் 8 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளது. எனவே, தினசரி குழந்தைகள் உணவில் அது இடம்பெற வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் எந்தவிதமான தீங்கும் ஏற்படுவதில்லை. அவற்றை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிறார்கள் தி ஜர்னல் ஆப் நியூட்ரீஷன் ஆய்வாளர்கள். உருளைக்கிழங்கை அளவோடு எடுத்துக்கொண்டு மேற்கூறிய நன்மைகளை எல்லாம் பெறலாம். இதனுடன் மிக முக்கியமாக குறைந்த அளவு எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தி சரியான முறையில் சமைத்து சாப்பிடவும்.

போதுமான வரை உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கை தோலுடன் அவித்து உண்ணும்போது அது மிகச்சிறந்த உணவாக உள்ளது என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com