இட்லி, தோசை மாவை நாம் கடைகளில் பாக்கெட்டில் வாங்குவதில் அவ்வளவு ஆபத்துக்கள் உள்ளன. அதிலும் சில குடும்பங்கள் தினமும் வாங்கி சாப்பிடுவார்கள். இதனால், என்னென்ன ஆபத்துக்கள் வரும் தெரியுமா? அதுமட்டும் தெரிந்தால், இனி வாங்கவே மாட்டீர்கள்.
பொதுவாக ப்ளாஸ்டிக் பைகளையே வாங்கக்கூடாது, அதில் அவ்வளவு கெடுதல்கள் உள்ளன என்று கூறுவார்கள். ஆகையால், பல முயற்சிகளுக்கு பிறகு படிப்படியாக உணவு பொருட்களுக்கு இந்த கவர் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. குறிப்பாக மாவுகளுக்கு பயன்படுத்தும் கவர்களில் அவ்வளவு கேடுகள் உள்ளன.
அந்தவகையில் இதன் ஆபத்துக்கள் என்னவென்பதைப் பார்ப்போம்.
பாக்கெட்டுகளில் இருக்கும் இட்லி, தோசை மாவு புளித்துவிட்டால், புளிப்பு சுவை வராமல் இருக்கவும், உப்பிக் கொண்டு போகாமல் இருக்கவும் போரிக் அமிலம் தடவப்படுகிறது. பாக்கெட்டில் மாவை சேர்ப்பதற்கு முன் அந்தக் கவரில் போரிக் அமிலம் தடவப் படுகிறது. இது புண்களை ஆற்றுவதற்குப் பயன்படுத்தும் ஒரு அமிலமாகும். இதனால் சில நாட்கள் வரை மாவு புளித்தாலும்கூட வெளியில் தெரியாமல் இருக்கும். ஆகையால், நாமும் என்ன செய்வோம்? ஏமாந்துப்போய் அதனை வாங்கி சாப்பிடுவோம்.
மேலும் இந்த அமிலம் உள்ள பாக்கெட்டுகள் இருக்கும் மாவை வாங்கி சாப்பிடுவதால், குடலில் பாதிப்புகள் ஏற்படும். கடுமையான வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
இந்நிலையில் இந்த மாவு புளித்துப் போகாமல் தவிர்க்க, கால்சியம் சிலிக்கேட் என்ற ரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் குடல் பிரச்சனை, சீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. சிலருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த மாவில் சுத்தமான தண்ணீர் கலந்து அரைக்கப்படுகிறதா? என்றும் நமக்கு உறுதியாக தெரியாது.
அதேபோல, மாவு ஆட்டுகின்ற போது, கிரைண்டரை கழுவும்போது எந்த தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுகிறது என்றும் தெரியாது. சுத்தமான தண்ணீரை கொண்டு கல்லைக் கழுவாவிட்டால், ஈகோலி என்ற பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படுமாம். இதனால், நாள்பட வயிற்று வலி, உடல் வறட்சி, இரைப்பை நோய் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என்கிறார்கள்.
இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்த பாக்கெட் மாவை வாங்கியே ஆக வேண்டுமா என்ன? ஒருவேளை கட்டாய சூழல் என்றால், வாங்கியவுடன் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பயன்படுத்தலாம் என்றும், எப்போது அரைத்தது என்பதை தெரிந்துக்கொண்டு வாங்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.