இயற்கை இருளை படைத்தது மனிதன் தூங்கத்தான் என்பதை நவீன உலகம் நம்மை மறக்க வைத்து விட்டது. மனம் மற்றும் உடலின் நலனுக்கு அவசியமான விஷயங்களில் தூக்கம் ஒன்று. நிம்மதியான தூக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, இதய குறைபாடுகள் என பல நோய்களைத் தவிர்க்கலாம்.
பொதுவாகவே நாம் காலையில் எழுந்தவுடன் அதிரடியாக நமது மூளை விழித்துக் கொள்ளாது. அதுவும் எழுந்து அதன் கடமைகளை துவங்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். நாம் விழித்த பிறகு 10முதல் 15 நிமிடங்கள் வரை நமக்கு தூக்க சோர்வு நீடிக்கலாம். ஆனால், இது தொடர்ந்தால் நமது அன்றாட வேலைகளில் நமது ஆற்றல் பாதிக்கும். இவற்றிற்கான காரணங்களை நாம் கண்டறிந்து சரி செய்யாவிட்டால், அவை நமக்கு காலப்போக்கில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சரியான தூக்கமின்மை, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிப்பது, தூக்க சுழற்சி மாறி கொண்டிருப்பது போன்ற தூக்கம் சார்ந்த ஒழுங்கீனங்களே நாம் விழித்த பிறகு ஏற்படும் சோர்வுக்கு காரணமாகின்றன.
நாம் பயன்படுத்தும் கைப்பேசிகள், கணினிகள் போன்றவற்றின் திரையிலிருந்து வரும் நீலக்கதிர்கள் பெரும்பாலும் நம்மை அதிகமாக தாக்குகின்றன. இது நமது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும் ’மெலடோனின்’ எனும் சுரப்பியை பாதித்து, நமது தூக்க சுழற்சியை கெடுக்கின்றன. இதன் விளைவாக நாம் விழிக்கும்போது, உடலில் சோர்வை உணருகின்றோம். தூக்கத்தில் குறட்டை விடுவது, நெடுநாள் இரவு தூக்கமின்மை, தூக்கத்தில் நடத்தல், தூங்கும்போது இடை இடையில் நமக்கே தெரியாமல் சுவாசம் தடைபடுவது போன்ற தூக்க ஒழுங்கீனங்கள் நாம் காலையில் விழித்த பின்பு நமக்கு சோர்வினை ஏற்படுத்தலாம்.
தூங்க போவதற்கு முன்பு காஃபின் அதிகமாக உள்ள பொருட்களை உண்பது நமது தூக்கத்தை கெடுக்கும். காஃபினில் உள்ள கூறுகள் நமது மூளையை விழிப்போடு வைத்திருந்து, நீண்ட நேரத்திற்கு நம்மை தூங்க விடாமல் செய்யும். அதே போல், நள்ளிரவில் அதிக முறை நம்மை விழிக்க செய்யும்.
முதுமை, கொசுக்கடி குளிர், புழுக்கம், நோய்கள், மன அழுத்தம், பயம், உடல்வலி போன்றவற்றால் நாம் தூக்கத்தை தொலைக்க நேரிடுகின்றது. தேவைப்படின் தகுந்த மருத்துவரின் ஆலோசணையின் கீழ் தூங்குவதற்காக நாம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவை ஒரு பழக்கமாக மாறாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
சிலர் தூங்குவதற்காக குடிக்கும் மது, அவர்களின் தூக்கத்தின் அளவை குறைத்துக் கொண்டே வரும். மதுவில் உள்ள கூறுகள், அவர்களை உடனே தூங்க வைத்தாலும், ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லாமல் பார்த்துக் கொள்கின்றன.
முதியோரிடையே வயதாவதின் காரணமாக காணப்படும் ’புரொஸ்டேட் வீக்கம்’ அவர்களை இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுப்பி, தூக்கத்தை கெடுக்கிறது. அதற்கு முறையான சிகிச்சை அவசியம்.
நல்ல சுத்தமான மற்றும் நமக்கு ஏற்ற அளவிலான படுக்கை நமக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அதிக வெளிச்சமும், சத்தமும் இல்லாத இடத்தில் உறங்குவது நல்லது. சத்தமான இடத்தில் நாம் தூங்கும் போது, அது நமது காதுகள் வழியாக மூளைக்கு சென்று நமது தூக்கத்தை கெடுக்கிறது. சரியான வெப்பநிலை உள்ள அறையில் உறங்குவது, நமக்கு ஆழ்ந்த மற்றும் நிம்மதியான உறக்கத்தை தரும். இது காலையில் நாம் புத்துணர்வுடன் விழிக்க உதவும்.
நமது உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றியும் இரவு தூக்கமின்மையும், காலையில் சோர்வும் தொடர்கிறது என்றால், நாம் உடனடியாக மருத்துவர்களை அணுகி தூக்கமின்மைக்கு தீர்வினை முறைப்படி காண்பது மிகவும் முக்கியம்.
தினமும் போதிய நேரம் தூங்குவதே நாம் உற்சாகத்தோடு இயங்குவதற்கு துணையாய் நின்று, நமது ஆற்றலை பெருக்கும் என்பதை நமது அனுபவம் ஒன்றே நமக்கு உணர்த்தும்.