-மணிமேகலை
கோடை வெயில் கொளுத்தும்போது வியர்வையுடன் சேர்ந்து நம் உடலில் சகிக்க முடியாத வாசனையும் வரத் தொடங்கிவிடும்... இந்தத் துர்நாற்றம் வியர்வையினால் தான் ஏற்படுகிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் வியர்வைக்கு எந்தவிதமான வாசனையும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், வியர்வை சாதாரண தண்ணீர் மாதிரிதான் இருக்கும். அதற்கு எந்த விதமான மணமும் நிறமும் கிடையாது. அப்படியிருக்க இந்தத் துர்நாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்ற சந்தேகம் எழுவது சாத்தியம்தான்.
நமது சருமத்துக்கு அடியில் இரண்டு முக்கிய வியர்வை சுரப்பிகள் உண்டு. ஒன்று எக்ரைன். இந்த சுரப்பி நமது சருமத்துக்கு அடியில் அமைந்துள்ளது. இது உரோமங்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. இதிலிருந்து சுரக்கும் வியர்வை தானாக வெளியேறிவிடும்.
மற்றொன்று அபோக்ரைன் சுரப்பி. இது உரோமங்களின் வேர்களுக்கு மிக அருகில் உள்ளது. இதிலிருந்து சுரக்கும் வியர்வைத்துளிகள் உரோமங்கள் வழியாக சருமத்தின் மேல் உள்ள சிறிய துளைகள் மூலமாக வெளியேறு கின்றன. அபோக்ரைன் சுரப்பியில் சுரக்கும் வியர்வைகள் கொழுப்பு மற்றும் புரோட்டீன்கள் நிறைந்தவை. இவை சருமத்தின்மேல் வாழும் பாக்டீரியாவினால் உண்ணப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இந்தக் கழிவுகளே நம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, ரோமங்கள் அதிகம் உள்ள இடங்களான அக்குள் போன்ற பகுதியில் இந்தச் சுரப்பி அதிகம் காணப்படும்.
நாம் சிறு வயதாக இருக்கும்போது இது மாதிரியான துர்நாற்றம் நம் உடலில் இருந்து வெளிவருவதை உணர்ந்திருக்கமாட்டோம். ஏனெனில், நாம் பருவம் அடைந்த பின்னரே இந்தச் சுரப்பி செயல்படத் தொடங்குகிறது. மேலும், வியர்வையின் அளவுக்கும் உடலின் துர்நாற்றத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. வியர்வை அதிகமாக சுரந்தால் துர்நாற்றமும் அதிகமாக இருக்கும் என்பதில் நிச்சயமில்லை. பெண்களைவிட ஆண்களுக்கே துர்நாற்றம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், பெண்களை விட ஆண்களின் உடம்பில் அதிக அளவில் உரோமங்கள் உள்ளதால் அங்கு அபோக்ரைன் சுரப்பியும் அதிகமாக இருக்கலாம்.
இந்தத் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிவதற்கு முன்பு, என்னென்ன காரணங்களால் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
குறிப்பாக, நாம் உண்ணும் உணவு, எடுத்துக்கொள்ளும் மருந்து, உடலில் ஏற்படும் சில ஹார்மோன் மாற்றங்கள், அதிக மனஅழுத்தம் மற்றும் அதிக பதட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடலில் இருந்து துர்நாற்றம் வீசலாம். சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக குறைபாடு போன்ற மற்ற நோய்கள் இருந்தாலும் உடலில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கட்டுப்படுத்தும் வழிகள்:
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் துர்நாற்றத்தைக் குறைக்கலாம்.
வெங்காயம், காலிஃபிளவர் போன்ற சயனைடு நிறைந்த உணவுகளைக் குறைவாக எடுத்துக் கொள்வதன் மூலம் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்.
காஃபின், சிகரெட் மற்றும் ஆல்ஹகால் போன்றவற்றைக் குறைத்துக்கொள்வதன் மூலமாகவோ அல்லது தவிர்ப்பதன் மூலமாகவோ உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்.
நல்ல காற்றோட்டமான ஆடைகள் அல்லது காட்டன் ஆடைகளை அணிவதன் மூலம் நமது உடலை வியர்வையால் வரும் துர்நாற்றத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.
மனஅழுத்தம் அபோக்ரைன் சுரப்பியை தூண்டி வியர்வை சுரப்பதற்கு காரணமாகிறது. எனவே, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதன் மூலம் நமது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தர இயலும்.
துர்நாற்றத்தை களைய தினமும் குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும்போது, உரோமங்கள் அல்லது அதிகம் வியர்க்கக்கூடிய இடங்களை நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும். துர்நாற்றம் அதிகமாக இருக்கிறது என்று உணர்ந்தால் ஆன்டிபாக்டீரியல் சோப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
உடலில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதன் மூலமும் வியர்வையால் வரும் துர்நாற்றத்தைக் குறைக்க இயலும்.
இவை எல்லாவற்றையும் சரியாக பின்பற்றினாலே உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதை ஓரளவிற்குத் தவிர்க்க இயலும்.
இதையும் தாண்டி உடலில் துர்நாற்றம் அதிகம் வருகிறது என்று உணர்ந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் துர்நாற்றம் வீசுவதைக் கட்டுப்படுத்த இயலும்.
எனவே, இனி வியர்வை மூலம் வரும் துர்நாற்றத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அதைக் கட்டுப்படுத்தி நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்தானே!