கர்ப்ப காலம் Vs அழகு சாதனப் பொருட்கள்… அச்சச்சோ, ஜாக்கிரதை!

Beauty products
Beauty products
Published on

கர்ப்ப காலம், ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக கவனத்துடனும் கையாளப்பட வேண்டிய ஒரு காலகட்டமாகும். இந்த நேரத்தில், தாய்மார்கள் தங்கள் உடல்நலனில் மட்டுமல்லாமல், பயன்படுத்தும் பொருட்களிலும் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். நமது சருமத்தையும் கூந்தலையும் அழகாக்க நாம் பயன்படுத்தும் சில அழகு சாதனப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் சில சமயங்களில் தீங்கு விளைவிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்தக் காலகட்டத்தில் எந்தெந்த அழகு சாதனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டிய அழகு சாதனப் பொருட்கள்:

1. வேக்ஸிங் (Waxing): கை கால்களில் உள்ள முடிகளை நீக்கப் பயன்படும் வேக்ஸிங் முறையில் Thioglycolic Acid என்னும் ரசாயனம் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் பயன்படுத்தும்போது சில ஆபத்துக்களை விளைவிக்கலாம். இதற்குப் பதிலாக, பாதுகாப்பான ஷேவிங் முறையைப் பின்பற்றுவது நல்லது.

2. இயற்கை பொருட்கள் (Organic Products): இயற்கையான பொருட்கள் என கூறப்படும் சில அழகு சாதனப் பொருட்கள் கூட சில சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் சருமம் மிகவும் உணர்திறன் கொண்டதாக மாறும் என்பதால், இந்தப் பொருட்களைத் தவிர்த்து, குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மென்மையான, ரசாயனமற்ற பொருட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. 

3. கடும் வாசனையுள்ள வாசனைத் திரவியங்கள்: சில வாசனைத் திரவியங்கள், அறை ஃப்ரெஷ்னர்கள், டியோடரண்டுகள் போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள், கருவில் இருக்கும் குழந்தையின் ஹார்மோன் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படக்கூடும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் இதுபோன்ற கடுமையான வாசனையுள்ள பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

4. டாட்டூ (Tattoo): டாட்டூ போடும் ஆசை இருந்தாலும், கர்ப்ப காலத்தில் அதைத் தள்ளிப்போடுவது அவசியம். பிரசவத்திற்குப் பிறகு, குழந்தை பிறந்த சில காலங்கள் கழித்து டாட்டூ போட்டுக் கொள்ளலாம்.

5. ரசாயனம் நிறைந்த சருமப் பராமரிப்புப் பொருட்கள்: சருமத்தைப் பராமரிக்கப் பயன்படுத்தும் சில அழகு சாதனப் பொருட்களில் அதிக அளவில் ரசாயனங்கள் கலந்திருக்கும். கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பிறகும் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையான அல்லது பாதுகாப்பான வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

6. DHA (Dihydroxyacetone) கொண்ட அழகுப் பொருட்கள்: Tan spray போன்ற DHA ரசாயனங்கள் கொண்ட அழகுப் பொருட்கள் சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, இந்தக் காலகட்டத்தில் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடவும்.

இந்தப் 6 பொருட்களை கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள் ஒரு விலைமதிப்பற்ற உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். உங்கள் குழந்தையின் ஆரோக்கியமே மிக முக்கியம்‌.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com