

அதிக குளிர் காரணமாக ஏற்படும் நோய்களில் முகவாதம் முக்கிய இடம்பெறுகிறது. அதிலும் முதியோர்கள், நீரிழிவு நோயாளிகள் போன்ற இணை நோய் இருப்பவர்களுக்கு அதிக குளிரின் காரணமாக முகவாதம் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் முகவாத பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. முகத்துக்கு உணர்வளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம், அலர்ஜி, வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனையை முகவாதம் (Bell's Palsy) என்கிறோம்.
2. இதன் காரணமாக வாயை ஒரு பக்கம் குவிக்க முடியாமல், உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு ஒரு பக்கம் கண்ணை முழுமையாக மூட முடியாமல் வாய் வழியே எச்சில் வடியும்.
3. முகவாதத்தை தடுக்க பாய், தலையணை போன்ற விரிப்புகள் இல்லாமல் குளிர்ந்த தரையில் படுக்கக் கூடாது. ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ந்த தரையில் வைத்துப் படுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், நேரடியாக தரையில் முகத்தை வைத்து படுப்பதன் காரணமாக முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
4. மேலும் கார், பேருந்து, ரயில் பயணங்களில் அதிக நேரம் குளிர்ந்த காற்று காது கன்னப்பகுதிகளில் படுமாறு பயணிக்க கூடாது.
5. ஏசி பயன்படுத்துவதாக இருந்தாலும் நேரடியாக குளிர்ந்த காற்று முகத்தில் படாமல் பார்த்துக் கொள்வது முக வாதத்தை தடுக்கும் முறைகளில் ஒன்றாக உள்ளது.
6. முகவாத பாதிப்பில் கண்கள் திறந்தே இருக்கும் என்பதால் வறண்டு விடாமல் இருக்க சொட்டு மருந்து பயன்படுத்துவது சிறந்தது. மேலும் பிசியோதெரபி சிகிச்சை எடுக்க வேண்டியதும் பலனளிக்கும்.
7. முகவாத பாதிப்புக்கு உள்ளானவர்கள் இரவில் மூடு கவசம் அணிவதோடு திரவ, திட உணவாக இல்லாமல் கரைத்த கஞ்சியாக உட்கொள்ளலாம் மேலும் வாய் வறண்டு இருக்கும் என்பதால் உணவில் வெண்ணெய் பயன்படுத்துவது வழவழப்புக்கு பலன் தரும்.
இவை எல்லாவற்றையும் விட முக வாதத்திற்கு ஆளானவர்கள் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதோடு வருமுன் காக்கும் நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)