தயிர், உலகம் முழுவதும் உள்ள மக்களால் பரவலாக விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும். இதை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஆனால், தயிரை மதிய வேளையில் உட்கொள்வது நல்லது எனக் கூறப்படுகிறது.
மதிய நேரத்தில் தயிரை உணவுடன் உட்கொள்ளும்போது அது குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இதனால் செரிமானம் எளிதாகும். இது உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து, உடலை குளிர்விக்க உதவும். எனவே, கோடை காலங்களில் தயிரை மதிய நேரங்களில் உணவில் சேர்த்துக் கொள்ள அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இரவு நேரத்தில் தயிரை உட்கொள்வதால் அது வாய்வு மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
மதிய நேரத்தில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: தயிரின் முக்கிய நன்மைகளில் ஒன்றாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. தயிரில் உள்ள இமுனோகுலோபின்கள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கூறுகளாகும். இவை நமக்கு தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறது. எனவே தயிர், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகளை நடுநிலையாக்கி நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
செரிமானம் மேம்படும்: தயிர் ப்ரோ பயோடிக் நிறைந்த ஒரு உணவாகும். அது நமது குடலுக்கு நல்லது. மேலும், அது வயிற்று எரிச்சல் மற்றும் அலர்ஜியை போக்குகிறது. தயிர் நமது செரிமான அமைப்பை சிறப்பாக மாற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. எனவே, மதிய நேரத்தில் தயிர் உட்கொள்வதால் உங்கள் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்: தயிர் நமது உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உருவாவதைத் தடுத்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தயிரை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதால், அதிக அளவு கொழுப்பு குறையும். இதனால் உயர் இரத்த அழுத்தம் அபாயம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
எடை இழப்புக்கு உதவும்: தயிர் சாப்பிடுவது எடை இழப்புக்கு பெரிதும் உதவுவதாகச் சொல்லப்படுகிறது. தயிரில் உள்ள சில பண்புகள் ஸ்டெராய்டு மற்றும் காட்டிசோல் ஹார்மோன்களின் உற்பத்தையைக் குறைக்கிறது. இதனால் உடற்பருமன் அபாயம் குறையுமாம். தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் அது நமது பிஎம்ஐ அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பும் அதிகம் எரிக்கப்படுகிறது.