உணவை 30 முறை மென்று சாப்பிடுவதால் நன்மைகள் என்ன? மருந்தே தேவையில்லையா?

ஒரு வாய் உணவை 30 முறை மென்று சாப்பிடும் பழக்கம் செரிமானத்தை சீராக்கி, உடல்–மன ஆரோக்கியத்தை மாற்றும் ‘மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ ரகசியம்!
Mindful Eating Benefits
Mindful Eating BenefitsImage credit: AI
Updated on

'நொறுங்கத் தின்றால் நூறு வயது' வாழலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய அதிவேகக் கணினி யுகத்தில், மொபைல் பார்த்துக் கொண்டோ அல்லது டிவி திரையை வெறித்துக் கொண்டோ அவசர அவசரமாக உணவை வாயில் போட்டுப் பலரும் விழுங்குகிறார்கள். ஒரு வாய் உணவை குறைந்தது 30 முறை நன்றாக மென்று சாப்பிடுவது, செரிமானத்தை சீராக்கி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையே மாற்றியமைக்கும். அது எப்படி என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

வாயிலேயே தொடங்கும் முதற்கட்ட செரிமானம்:

நம்மில் பலர் செரிமானம் என்பது வயிற்றில் மட்டுமே நடக்கும் ஒரு செயல் என்று நினைக்கிறோம்; ஆனால் அது தவறு. செரிமானத்தின் முதல் புள்ளி நமது வாய்தான். உணவை 30 முறை நன்றாக மெல்லும்போது, வாயில் சுரக்கும் உமிழ்நீர் உணவோடு முழுமையாகக் கலக்கிறது. உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் , உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டுகளை வாயிலேயே உடைக்கத் தொடங்குகின்றன. இதனால் இரைப்பை மற்றும் குடல்களின் வேலைப்பளு பாதியாகக் குறைகிறது.

உடல் எடை மேலாண்மை:

உணவை வேகமாக விழுங்குபவர்கள் அதிகமாகச் சாப்பிடுவார்கள். ஏனென்றால், நாம் சாப்பிடத் தொடங்கியதிலிருந்து நமது வயிறு நிறைந்துவிட்டது என்ற உணர்வை நமது மூளைக்கு அனுப்ப குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும். ஒரு வாய் உணவை 30 முறை மெதுவாக மென்று சாப்பிடும் போது நிதானமாக உண்கிறோம். இதனால் மூளைக்கு 'வயிறு நிறைந்துவிட்டது' என்ற செய்தி சரியான நேரத்தில் சென்றடைகிறது. இதன் விளைவாக, நாம் அளவை மீறி உண்பது தடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் உடல் எடையும் இயல்பாகவே குறைகிறது.

ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படுதல்:

நாம் சத்தான உணவைச் சாப்பிடுவது முக்கியம். ஆனால் அந்த உணவிலிருந்து எவ்வளவு சத்துக்களை நம் உடல் உறிஞ்சுகிறது என்பது அதை விட முக்கியம். உணவை நன்றாக மென்று, கூழாக்கி விழுங்கும்போது, குடலால் அதிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்களை எளிதாக உறிஞ்ச முடிகிறது. அரைகுறையாக உணவை விழுங்கினால், குடலில் தங்கி புளித்துப்போய், வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் அசிடிட்டியை உருவாக்குகிறது. அதுவே உணவை 30 முறை மென்று உண்ணும் போது இந்த உபாதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
உணவை மென்று தின்றால் இத்தனை அதிசயங்களா? உங்க கிச்சன்லேயே ஒரு மெடிக்கல் மிராக்கிள்!!
Mindful Eating Benefits

மன அழுத்தத்தைக் குறைக்கும் 'மைண்ட்ஃபுல் ஈட்டிங்'

உணவை கண்களால் நன்றாகப் பார்த்து, அதன் சுவையை உணர்ந்து, மென்று உண்ணும்போது அது ஒரு வகையான தியானம் போல இருக்கும். இதையே நவீன மருத்துவ உலகம் 'மைண்ட்ஃபுல் ஈட்டிங்' என்கிறது. இப்படிச் சாப்பிடும்போது நம் உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோனின் அளவு குறைகிறது. உணவின் மீதான கவனம் நம் மனதை அமைதிப்படுத்துகிறது.

பல் மற்றும் முகத்தசைகளுக்கான உடற்பயிற்சி

உணவை 30 முறை நன்றாக மெல்லும்போது தாடைத் தசைகள் வலுவடைகின்றன. உமிழ்நீர் அதிகம் சுரப்பதால் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பற்சிதைவு மற்றும் வாய் துர்நாற்றம் தடுக்கப்படுகிறது. இது முகப்பொலிவிற்கும் உதவுகிறது.

தினமும் உணவு உண்ணும்போது அவசர அவசரமாக உண்ணாமல், குறைந்தது ஒரு 20 நிமிடமாவது ஒதுக்கி, முப்பது முறை மென்று உண்ணத் தொடங்கினால் செரிமானம் சீராகி, ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்!

logo
Kalki Online
kalkionline.com