பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்துமே பயன்படக்கூடியவை. குறிப்பாக நுங்கு, பதனி போன்ற உணவுகள் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பதனியை நன்கு காய்ச்சி பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்றவை உருவாக்கப்படுகிறது. பனங்கற்கண்டு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது எனத் தெரிந்தாலும், அவை எதுபோன்ற உடல் பிரச்சனைகளை நீக்கும் என்பது பெரும்பாலான நபர்களுக்குத் தெரிவதில்லை. இந்த பதிவு மூலமாக அதை நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது. பனங்கற்கண்டை வாயில் போட்டுக்கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால், வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவை முற்றிலுமாக நீங்கும்.
கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை இவை சரி செய்ய உதவுகிறது. பாலை நன்றாகக் காய்ச்சி அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் மார்புச்சளி முற்றிலும் குணமாகும்.
நீர்க்கட்டு, ஜுரம் போன்றவற்றை நீக்கும் பண்புடைய பனங்கற்கண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீறாவதாகவும் சொல்லப்படுகிறது.
தினசரி உடல் உழைப்பு அதிகமுள்ள நபர்கள் உடல் சோர்வை நீக்கி சத்துக்களை மீட்டெடுக்க, நெய்யுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் இதை நிலக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
எவ்வித நோயாக இருந்தாலும் அதை எதிர்த்து நிற்பதற்கு நோயெதிர்ப்பு சக்தி தேவை. பனங்கற்கட்டில் மிளகு, பாதாம், சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் வெங்காயச் சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், சிறுநீரக பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும்.
ஞாபக சக்தி மேம்பட விரும்புபவர்கள் பாதாம் பருப்பு, சீரகம், பனங்கற்கண்டு மூன்றையும் சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகி கண்பார்வையையும் சிறப்பாக மாற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.
இப்படி பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பல ஆரோக்கிய நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே பனங்கற்கண்டை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஏற்கனவே நாள்பட்ட பிரச்சினைகளில் இருப்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை பேரில் இதை எடுத்துக் கொள்வது நல்லது.