

'டீ' என்பது வெறும் ஒரு பானம் மட்டுமல்ல, அது பலரது வாழ்வியலோடு கலந்த ஒரு உணர்வு என்று சொன்னால் மிகையாகாது. பசி எடுத்தால் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, நேரம் தவறாமல் டீ குடிக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. நாம் புத்துணர்ச்சிக்காக விரும்பி அருந்தும் இந்தத் தேநீர், உண்மையில் நம் உடலுக்கு நன்மை செய்கிறதா அல்லது கேடு விளைவிக்கிறதா என்பதை நாம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேநீர் ஒரு சிறந்த பானம் தான், ஆனால் அதைக் குடிக்கும் முறையும் அளவும் மாறும்போது, அதுவே உடலுக்குப் பல உபாதைகளை உண்டாக்கும் விஷயமாகவும் மாறக்கூடும்.
தேநீரின் ரகசிய நன்மைகள்!
தேயிலையில் இயற்கையாகவே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்சிடெண்டுகள் நம் உடலில் உள்ள செல்களைப் பாதுகாத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக இதயத்தைப் பாதுகாப்பதிலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதிலும் இதற்குப் பெரும் பங்கு உண்டு.
காபியைப் போல நடுக்கத்தையோ அல்லது பதற்றத்தையோ ஏற்படுத்தாமல், மூளையைச் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் வைத்திருக்கத் தேநீர் உதவுகிறது. கிரீன் டீ போன்ற வகைகளில் உள்ள சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவுகின்றன.
புற்றுநோயைத் தடுக்கும்!
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் தேநீர் அருந்துவது மிகச் சரியான அளவாகும். இந்த அளவில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்குப் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு வெகுவாகக் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் நன்மை தருகிறது என்பதற்காக நாள் முழுவதும் டீ குடித்துக்கொண்டே இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் உடலில் அதிகப்படியான கலோரி சேர்ந்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
தவிர்க்க வேண்டியவை!
தேநீர் அருந்துவதற்கு என்று சில வரைமுறைகள் உள்ளன. காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் டீ குடிப்பது குடலுக்கு மிகவும் ஆபத்தானது. இது அமிலத்தன்மையை அதிகரித்து, நெஞ்செரிச்சல் மற்றும் பசியின்மையை உண்டாக்கும். எனவே காலை உணவு சாப்பிட்ட பிறகு அல்லது மதிய உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு டீ குடிப்பதே சிறந்தது. அதேபோலத் தூங்குவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.
ஆபத்தான பழக்கம்!
பல வீடுகளிலும் கடைகளிலும் செய்யப்படும் மிகப்பெரிய தவறு, ஆறிப்போன டீயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பது. இப்படிச் செய்வதால் தேயிலையின் சுவை கெடுவதோடு மட்டுமல்லாமல், அதில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடுகின்றன. குறிப்பாகப் பால் கலந்த டீயைச் சூடுபடுத்தும்போது அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகின்றன.
இது வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் அளவுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு, உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் கிரகித்துக்கொள்ளும் திறன் குறைந்து, ரத்த சோகை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
தேநீர், ஒரு மருந்து போன்றது. அதைச் சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் அது நம் ஆயுளைக் காக்கும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல, தேநீரையும் அளவோடு ருசிப்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)