ஒரெகானோவிலிருக்கும் உன்னத நன்மைகள்!

ஒரெகானோ எண்ணெய்
ஒரெகானோ எண்ணெய்https://www.indiamart.com
Published on

பாரம்பரிய இத்தாலிய சமையலில் சேர்க்கப்படும் ஓர் ஆரோக்கியம் நிறைந்த மூலிகை ஒரெகானோ (Oregano). இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத் தயாரிப்புகளில் உபயோகப்படுத்தப்பட்டு நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்க உதவி வருகிறது. இந்த மூலிகையிலிருந்து நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஒரெகானோ ஓர் ஆன்டி பாக்டீரியல் குணமுடைய மூலிகை. ஒரெகானோ ஆயிலில் மற்ற கூட்டுப் பொருட்களுடன் கார்வக்ரால் (Carvacrol) மற்றும் தைமோல் (Thymol) என்ற பொருட்களும் உள்ளன. இவை தீங்கு தரும் பல வகையான பாக்டீரியாக்கள் நம் உடலுக்குள் வளர்வதைத் தடுக்க வல்லவை. மேலும், இக்கூட்டுப் பொருட்கள் நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகளின் செல் சவ்வுகளை (Cell Membrane) சிதைவடையச் செய்து, அவை பெருகிப் பரவுவதைத் தடுக்கின்றன. இதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை வலுவடையச் செய்யவும் உதவுகின்றன. ஈ கொலி (E.Coli) மற்றும் சல்மோனெல்லா (Salmonella) போன்ற தொற்று நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் ஒரெகானோவுக்கு உள்ளதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

2. நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுவது மட்டுமின்றி நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் மூலிகை ஒரெகானோ. இதில் நிறைந்துள்ள அதிகளவு ஆன்டி  ஆக்ஸிடன்ட்கள் ஃபிரீரேடிகல்களின் அளவை சம நிலைப்படுத்தவும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை செயலிழக்கச் செய்யவும் உதவி புரிகின்றன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் சுறுசுறுப்பான செயல் திறன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை விரைவில் குணமாக்கவும் உதவி புரியும். ஒரெகானோவில் உள்ள வைட்டமின் A, C மற்றும் ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்களும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த பங்களிப்பைத் தந்து உதவுபவை.

3. ஒரெகானோவில் உள்ள சுறுசுறுப்பான செயல் திறன் கொண்ட கார்வக்ரால் என்ற கூட்டுப் பொருள் மெட்டபாலிச அளவை உயரச் செய்யும். இது எடைக் குறைப்பிற்கு உதவுவதுடன், சீரான செரிமானத்துக்கும், கொழுப்பின் அளவை சம நிலையில் வைக்கவும் உதவும். இதனால் எரிக்கப்படும் கலோரி அளவும் கூடும்.

இதையும் படியுங்கள்:
வனக்குளியல் தரும் நன்மைகள் தெரியுமா?
ஒரெகானோ எண்ணெய்

4. கார்வக்ரால் மற்றும் தைமோல் போன்ற இரசாயன கூட்டுப் பொருட்கள் ஆன்டி கேன்சர் குணமுடையவை. இவை கேன்சர் செல்களின் வளர்ச்சியையும் பரவலையும் தடுத்து அவற்றை அழிக்கவும் உதவும். இது சம்பந்தமான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதன் உறுதித்தன்மை நிரூபணமான பின்பே ஒரெகானோ எந்த அளவுக்கு புற்றுநோயை குணப்படுத்த உதவும் என்பதைக் கூற முடியும்.

ஒரெகானோவின் காய்ந்த இலைகளை தூளாக்கி உணவுகளின் மீது சிறிதளவு தூவி உண்ணலாம். ஒரெகானோ எண்ணெயை உபயோகிக்கும்போது அதன் அடர்த்தியை குறையச் செய்து (Dilute) பயன்படுத்துவது நலம்.

ஒரெகானோ ஒரு சுவையூட்டி மட்டுமல்ல, அதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் குணங்கள் நம் ஆரோக்கிய வாழ்விற்கு அர்த்தம் கூட்டுபவைகளாகவும் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com