சுரைக்காயை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொக்கிஷம் என்று கூறினால் மிகையாகாது. ஏனென்றால், இதில் வியப்பில் ஆழ்த்தும் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆனால், பாகற்காய் போலவே எல்லா தரப்பினரும் வெறுக்கக்கூடிய காய்கறியாகவே சுரைக்காய் உள்ளது. ஆனால், இந்தப் பதிவில் சொல்லப்போகும் விஷயங்களைப் படித்த பிறகு யாரும் சுரைக்காயை இனி ஒதுக்க மாட்டீர்கள். இதில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா என ஆச்சரியப்படுவீர்கள்.
சுரைக்காயின் ஊட்டச்சத்துக்கள் என பார்க்கும்போது 100 கிராம் சுரைக்காயில் வெறும் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவாக இது இருக்கிறது. மேலும், இதில் 96 சதவீத நீர்ச்சத்தும், விட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து, தையமின், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இதில் குறைந்த அளவு மட்டுமே கொழுப்பு இருப்பதால் எல்லா வயதினரும் பயப்படாமல் தாராளமாக சாப்பிடலாம்.
சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
சுரைக்காயில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் அது நம் தாகத்தைத் தீர்க்க உதவுகிறது. மேலும், உடல் சோர்வை நீக்கி, குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
இதில் காணப்படும் பொட்டாசியம் தாதுக்களால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு இதயத்துக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
குறைந்த கலோரி கொண்ட சுரைக்காயை செரிமான பிரச்னை உள்ளவர்களும், உடல்நிலை சரியில்லாதவர்களும், காயமடைந்தவர்களும், சர்க்கரை நோயாளிகளும்கூட எடுத்துக்கொள்வது நல்லது.
சுரைக்காயில் இயற்கை சர்க்கரை இருப்பதால், உடற்பயிற்சி செய்பவர்கள் இழக்கும் ஆற்றலை மீட்டெடுக்க இது உதவுகிறது. மேலும், உடலின் எலும்புகளை இது வலுப்படுத்துகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாக சுரைக்காய் பார்க்கப்படுகிறது. இது தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளதால், தாய் மற்றும் கருவை ஆக்சிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இப்படி பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் தரும் சுரைக்காயை நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, நம்மை நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைத்திருக்க இது உதவுகிறது. எனவே, சுரைக்காயின் பயனை அறிந்து அதை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள முயலுங்கள்.