பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு இந்நோய் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
காரணங்கள்:
1. சிறு வயதில் ஏதேனும் பாதிப்பு காரணமாக கதிரியக்க சிகிச்சைக்கு உள்ளானவர்களுக்கு வருங்காலத்தில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
2. சிறு வயதில் பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகம் இருக்கும். இவர்களுக்கு பிற்காலத்தில் மற்றவர்களை விட மார்பகப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
3. முதல் குழந்தையை 35 வயதிற்கு மேல் பெறும் பெண்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
4. மெனோபாஸ் சரியான வயதில் வராமல் தள்ளிப்போவதும், 50 வயதைத் தாண்டியும் மெனோபாஸ் ஏற்படும் பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.
5. இரத்த உறவுகளில் யாருக்கேனும் இந்நோய் இருந்தால் அவர்களின் சந்ததியினருக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, உடன் பிறந்தவர்கள், அம்மா போன்றோருக்கு இருந்தால் அந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
6. இரவுப் பணியில் அதிகம் வேலை செய்யும் பெண்களுக்கு மெலோடோனின் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
அறிகுறிகள்: மார்பில் வலி இல்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி, மார்பகம் தடிப்பது, மார்பகக் காம்பிலிருந்து திரவம் அல்லது இரத்தம் கசிவது, மார்பகக் காம்பு உள் இழுத்துக் கொள்ளுதல், அக்குளில் வீக்கம் போன்றவை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். மார்பின் வடிவம், நிறம் போன்றவற்றில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.
வராமல் தடுக்க:
1. அதிக உடல் பருமனைக் குறைத்து ஃபிட்டாக இருக்க தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதும், இரவு நேரங்களில் அதிகம் கண் விழித்து இரவுப் பணியை செய்வதைத் தவிர்த்தும், குழந்தை பிறப்பை தள்ளி போடாமல் 30 வயதிற்கு முன்பே திட்டமிடுவதும், ஒரு வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் போன்றவற்றை பின்பற்ற மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2. மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறிந்தால் அதிலிருந்து முழுமையாக மீண்டு விட முடியும்.
3. வருடத்திற்கு ஒரு முறை ‘மேமோகிராம்’ எனப்படும் மருத்துவ பரிசோதனையை செய்துகொள்வது அவசியம்.
4. வாரம் ஒரு முறை ஒவ்வொருவரும் தங்களுடைய மார்பகங்களை சுயபரிசோதனை செய்து எந்த ஒரு சின்ன உபாதையோ, அறிகுறியோ இருந்தால் உதாசீனப்படுத்தாமல் மருத்துவரை கலந்தாலோசிப்பதும் அவசியம்.
பெண்களே மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை உடல் நலனில் மிகுந்த முன்னெச்சரிக்கை கவனம் தேவை.