குழந்தைகளுக்கும், வளரும் பிள்ளைகளுக்கும் கால்சியம் சத்து தேவை என்பதற்காக காலையில் ஒரு கிளாஸ் பால் தரும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இரவில் பெரியவர்கள் கூட நன்றாகத் தூக்கம் வரவேண்டும் என்பதற்காக பால் அருந்துவது வழக்கம். ஆனால், பால் அருந்துவதை விட, மோர்தான் உடலுக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். ‘நெய் உருக்கி, மோர் பெருக்கி உண்ண வேண்டும்’ என்கிறது சித்த மருத்துவம்.
பாலை காய்ச்சி உரை ஊற்றி தயிரான பிறகு அதைக் கடைந்து மோர் தயாரிக்கிறோம். ஆனால், ஏன் பாலை விட மோர் சிறந்தது? தற்போது நாம் வாங்கும் பாக்கெட் பாலில் பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, ப்ராசஸ் செய்யப்பட்டு வருகிறது. இதில் சத்துக்களை விட தீமைகளே அதிகம். வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, ஒவ்வாமை, டைப்-1 சர்க்கரை நோய், ஆஸ்துமா, சைனஸ், மூட்டுவலி, உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பலவிதமான பிரச்னைகளுக்கு பால் ஒரு காரணியாக இருக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கிராமப்புற பால்காரர்கள் கொண்டு வரும் பாலும் உடலுக்கு ஆரோக்கியம் தருவதல்ல.
கடைந்த மோரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இவற்றில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. மோரில் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள், அதிக புரதம் மற்றும் கால்சியம் சத்து உள்ளன. இது குடல் இயக்கத்துக்கும், செரிமானத்துக்கும் உதவுகின்றன. மேலும், வைட்டமின் பி 12, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது மோர். உடல் சோர்வை நீக்கி, உடல் சூட்டை தணித்து உடலுக்குக் குளிர்ச்சி தரவல்லது மோர். அதிலும் கோடைக்காலங்களில் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வையால் உடலில் உப்பு சத்தும் நீர்ச்சத்தும் குறைகிறது. அதை ஈடு செய்ய நீர் மோர் ஒன்றே போதுமானது. இது வாய்ப்புண்களை குணமாக்கும். உடல் எடை குறைய விரும்புபவர்கள் மோரை தினசரி எடுத்துக் கொள்ளலாம். பித்த உடல் கொண்டவர்கள் மோரை அதிகம் குடித்துப் பயன் பெறலாம்.