இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கமாகிவிட்டது. பிறருடன் தொடர்புகொள்வது முதல் பொழுதுபோக்கு வரை எல்லாவற்றிற்கும் நாம் நம் ஸ்மார்ட்போனை நம்பி இருக்கிறோம். ஆனால், இதனால் நம் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பதிவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு நம்மை அதிக நேரம் ஒரே இடத்தில் இருக்க வைக்கிறது. நாம் நம் ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்தும்போது உடல் இயக்கங்கள் குறைந்து விடுகிறது. உடல் செயலற்றதன்மை இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து கொழுப்பு அளவை அதிகரித்து இதயம் சரியாக செயல்படாமல் போகச் செய்யும்.
ஸ்மார்ட்போன் ஒளியானது நம் தூக்க சுழற்சியை பாதிக்கிறது. இரவில் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனின் உற்பத்தியைக் குறைத்து தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.
ஸ்மார்ட்போன் மூலம் கிடைக்கும் தொடர்ச்சியான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. மன அழுத்தம் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்தநாளங்களை சுருங்கச் செய்து இதய நோய்க்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு நம் உணவுப் பழக்கங்களை பாதிக்கிறது. நாம் சாப்பிடும்போது கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது அதிகமாக சாப்பிட வைத்து, உடல் பருமனை அதிகரிக்கும். உடற்பருமன் இதய நோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் கையில் பிடித்து பயன்படுத்துவது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். இது ரத்த ஓட்டத்தை பாதித்து இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
பல ஆய்வுகள் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் இதய நோய்கள் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்துள்ளன. அவை ஸ்மார்ட்போன் அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதைக் காட்டுகின்றன.
ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் பல விஷயங்களுக்கு உபயோகமாக இருந்தாலும், அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது முக்கியம். அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே, ஸ்மார்ட்போனை சரியான முறையில் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். என்றுமே தொழில்நுட்பத்தை நமக்கு சாதகமாகத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில்நுட்பம் நம்மை பயன்படுத்திக்கொள்ள விடக்கூடாது.