

ஒருவரின் அழகை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிப்பது அவரது கூந்தல் தான். ஒருவரின் தன்னம்பிக்கையை உயர்த்தும் முக்கிய காரணியாக நீண்ட ஆரோக்கியமான கூந்தல் இருக்கிறது. ஆண்களை விட பெண்களுக்கு தான் தங்களின் தலைமுடியின் மீது அதீத அக்கறை உள்ளது. ஆயினும் ஒரு சில பெண்கள் இரவு நேரங்களில் குளித்துவிட்டு, சரியாக உலர்த்தாமல் ஈரமான கூந்தலுடன்(Wet hair) அப்படியே உறங்கும் பழக்கத்தினை வைத்துள்ளனர். இது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், நீண்ட காலம் உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையின் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சரும பராமரிப்பு மற்றும் முடி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரமான கூந்தல் ஏன் பலவீனமானது?
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஈரமான தலைமுடியில் அதன் ஹைட்ரஜன் பிணைப்புகள் தற்காலிகமாக உடைந்து, முடி வலிமையற்றதாக மாற்றுகிறது. இந்த நிலையில் முடி மிகவும் மென்மையாகவும், எளிதில் உடையக்கூடிய தன்மையுடனும் இருக்கும். முடியின் இந்த பலகீன நிலையில் ஒருவர் உருண்டு, படுத்து உறங்கும் போது, முடிகளில் உராய்வு ஏற்பட்டு வேகமாக சேதமடைகிறது.
இதை எளிமையாக விளக்க வேண்டும் என்றால், ஒருவரின் உலர்ந்த தலை முடியை சுலபமாக கட் செய்ய முடியாது. அதே நேரம் தலையில் சிறிது தண்ணீர் தெளித்து விட்டு முடியை வெட்டினால், முடி கொத்தாகப் பெயர்ந்து வரும். இது தான் ஈரமான தலையில் உள்ள முடியின் பலகீன நிலைக்கு சரியான எடுத்துக் காட்டு. இந்த சந்தர்ப்பத்தில் தலைமுடி பாதிப்பு அடைவதோடு மட்டுமல்லாமல், சளி, காய்ச்சல், நோய் தொற்றுகள் ஆகியவற்றை அழைத்து வரும் சிறப்பு வரவேற்பாளராகவும் இருக்கிறது.
முடி உதிர்வுகள்:
ஈரமான தலையுடன் படுத்து உறங்கும் போது, தூங்கும் போது இரு பக்கமும் புரண்டு படுக்கையில் தலைமுடி தலையணையில் அழுந்தி, உடையவோ அல்லது உதிரவோ செய்யும். சாதாரணமாக தூங்கும் போது உதிரும் தலை முடியை விட ஈரமான தலைமுடியுடன் தூங்கும் போது உதிரும் முடிகள் மிகவும் அதிகமாக இருக்கும்.
பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள்:
வழக்கமாக நீங்கள் படுக்கும் தலையணையில், உங்கள் தலையில் உள்ள ஈரம் சேரும்போது, பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் தலையணையில் அதிகம் உற்பத்தியாகும் வாய்ப்புகள் உருவாகிறது. இவை தலையணையில் இருந்து உங்களின் தலைக்கு எளிதில் பரவி விடும். ஈரமான தலை ஆரோக்கியத்திற்கு அதிக எதிர்மறையான விளைவுகளை தருகிறது. குறிப்பாக, ஈரமான முடியுடன் தூங்குவது உச்சந்தலையில் மலாசீசியா போன்ற பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது அரிப்பு, வீக்கம் மற்றும் சரும அலர்ஜிகளுக்கு வழிவகுக்கும்.
பொடுகுப் பிரச்சினை:
தலையில் பூஞ்சை தொற்றுகள் உருவாகும்போது அது பொடுகு அல்லது செபோர்ஹெக் டெர்மடிடிஸ் போன்ற நோய் தொற்றுகளை தலையில் உருவாக்குகிறது. இதனால் உச்சந்தலையில் செதில்கள் உதிர்வதுடன், முடி வேர்களும் பலவீனமடைகின்றன.
சில தவிர்க்க முடியாத சூழலில் இரவு நேரங்களில் பெண்கள் தலைக்கு குளித்தால், அதிலிருந்து முடியும் சேதங்களை குறைப்பது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
1. சில நேரங்களில் இரவு நேரத்தில் தலைக்கு குளித்து விட்டால், தலைமுடியை நல்ல சுத்தமான பருத்தித் துணியை கொண்டு சுற்றி, அந்த ஈரத்தை அந்தத் துணி உறிஞ்சும் வரை காத்திருக்கவும்.
2. ஹேர் டிரையர் மூலம் தலைமுடியை உடனடியாக உலர வைக்கலாம்.
3. காற்றோட்டமான இடங்களில் தலைமுடியை உலர்த்தி காய வைக்கலாம்.
4. தூங்கும்போது தலைமுடியை இறுக்கமாக கட்டாமல் தளர்வாக விட வேண்டும். இது முடி உதிர்தலை குறைக்கிறது.
5. முடி உலர்ந்த பின் கண்டிஷனர் அல்லது எண்ணெய் தேய்த்து விட்டு படுக்கலாம். இது முடிக்கு ஒரு இயற்கை கவசமாக மாறி உதிர்வை குறைக்கிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)