Cassia fistula: உள்ளுறுப்புகளை பலப்படுத்தும் சரக்கொன்றை!

Cassia fistula
Cassia fistula

வீட்டையும் ரோடுகளையும் அழகு படுத்துவது சரக்கொன்றை. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் சரக்கொன்றை சீசன் வந்தால் அவற்றின் பூக்களைப் பறித்து குல்கந்து செய்து சாப்பிடுவார்கள். அது எப்பொழுதும் வெயிலில் காய்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், மிக நீண்ட தொலைவில் இருந்து கூட வந்து இதை பறித்துக் கொண்டு போவார்கள். அவ்வளவு மருத்துவ குணங்கள் வாய்ந்தது இந்த சரக்கொன்றை மலர். அதனைப் பற்றி இப்பதிவில் காண்போம்!

சரக்கொன்றை பூவை எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்க, சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.

புவிதழ்களைச் சம எடை கல்கண்டுடன் இடித்து வெயிலில் வைத்து பதப்படுத்த தேனூறல் எனப்படும் குல்கந்து கிடைக்கும். இதில் சிறிதளவு எடுத்து காலை மாலை பாலுடன் சாப்பிட்டு வர உள்ளுறுப்புகள் பலப்படும். உடல் மெலிந்த சிறுவருக்கு உடல் தேற மிகவும் பயனுள்ளதாகும் இந்த குல்கந்து.

கொன்றைப் பூக்களை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி சாப்பிட வயிற்றுப் புழுக்கள் அழிந்து நோயகலும் .நீடித்து சாப்பிட மதுமேகம் தீரும்

இலையை அரைத்துப் பூசிவர படர்தாமரை குணப்படும்.

பூ மற்றும் இலையை வதக்கி துவையல் ஆக்கி உணவுடன் கொள்ள வயிறு சுத்தமாகும்.

சரக்கொன்றை பூவையும் கொழுந்தையும் சமனளவு அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு 100 மில்லி பாலில் கலக்கி உண்டு வர காமாலை, பாண்டு, வெட்டை, பிரமியம் ஆகியவை தீரும்.

சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சம அளவு கலந்து உணவு பாகங்களில் பயன்படுத்த, மலச்சிக்கல் அறும்.

கொன்றைப் புளியை நீரில் கரைத்து கொதிக்க வைத்து பற்றுப் போட கணுச்சூலை, வீக்கம் ஆகியவை தீரும்.

கொழுந்தை அவித்து பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மில்லி அளவு குடிக்க, வயிற்றில் உள்ள நுண் புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும்.

சரக்கொன்றை வேர்ப்பட்டையை பஞ்சு போல் நசுக்கி ஒரு லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராக காய்ச்சி, திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும், மாலையில் பாதியும் சாப்பிட்டு வர காய்ச்சல் தணியும். இதய நோய் குணமாகும். நீண்ட நாள் சாப்பிட மேகநோய்ப் புண்கள், கணுச்சூளை தீரும். ஒருமுறை வயிற்றுக் கழிவு அகலுமாறு அளவைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எளிமை என்பது ஏழ்மை அல்ல. அற்புதமான வாழ்க்கைக்கு வேர்!
Cassia fistula

கொன்றை வேர் முருங்கை வேர் பட்டை தலா 50 கிராம் எடுத்து அரைத்து துணியில் முறுக்கி சாறு எடுத்து அதை ஒவ்வொரு காதிலும் இரண்டு சொட்டு மூன்று நாட்கள் விட காது நன்றாக கேட்கும்.

சரக்கொன்றை இலைகள் கைப்பிடி அளவு எடுத்து நைஸ் ஆக அரைத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் காலை மாலை இரண்டு நாள் பூசி 2 மணி நேரம் கழித்து குளித்தால் அரிப்பு சரியாகும்.

இவ்வளவு நன்மை செய்யும் சரக்கொன்றையை சும்மா விடலாமா? அது பூத்திருக்கும் காலத்தில், அதைப் பறித்து சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com