நாம் எப்படி நமது சருமத்தையும் தலைமுடியையும் பராமரிக்கிறோமோ, அதே போன்ற கவனிப்பு நம் உதடுகளுக்கும் தேவை. உதடுகளில் தோல் மென்மையாகவும், வியர்வை சுரப்பிகள் இல்லாமலும் இருக்கும். இதன் காரணமாகவே சில சமயங்களில் உதடுகள் வறண்டு வெடிப்பு ஏற்படுகிறது. இதுபோக சிலருக்கு உதடுகளில் கருப்பு புள்ளிகள் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஹைபர் பிக்மென்டேஷன்: இந்த பாதிப்பு காயங்கள், பூச்சி கடித்தல், ஹார்மோன் மாற்றம், பருக்கள் போன்றவற்றால் ஏற்படலாம். இது உதடுகள் உட்பட உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும். இந்த அபாயத்தைக் குறைக்க நீங்கள் வெளியில் செல்லும்போது உதடில் லிப் பாம் போட்டுக்கொண்டு செல்வது நல்லது. இதுதவிர தோல் மருத்துவரை அணுகி உதட்டில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைக்க ஆலோசனை பெற்று அதற்கு ஏற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
அலர்ஜி: நீங்கள் உதட்டிற்கு ஏதாவது புதிய ப்ராடக்டுகள் பயன்படுத்தி இருந்தால், அதனால் அலர்ஜி உண்டாகி கரும்புள்ளிகள் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக டூத் பேஸ்ட், ஹேர் டை, மவுத்வாஷ், லிப்ஸ்டிக், லிப் பாம் போன்றவை இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
ஓரல் மெலனோமா: சில சமயங்களில் திடீரென உதட்டில் கருப்பு புள்ளிகள் ஏற்பட்டால், அது தோல் புற்றுநோய் அல்லது ஓரல் மெளனோமாவின் அறிகுறியாக இருக்கலாம். இந்த வகை புள்ளிகள் பெரும்பாலும் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றி அளவுகள் மாறிக்கொண்டே இருக்கும்.
நீரிழப்பு: நீங்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் நீரிழப்புடன் இருந்தால் அதன் அறிகுறியாக முதலில் உதடுகளில் கருப்பு புள்ளிகள் தோன்றும். மேலும் உதடுகள் வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதற்குப் பின்னர், அலர்ஜி காரணமாக கருப்பு புள்ளிகள் மற்றும் ஹைபர் பிக்மென்டேஷன் பாதிப்புகள் ஏற்படுகிறது.
வைட்டமின் பி12 குறைபாடு: உடலில் விட்டமின் பி12 குறைபாடு இருந்தால் உதட்டில் கரும்புள்ளிகள் ஏற்படலாம். மேலும் ரத்த சோகை காரணமாக வாயில் புண், தோலின் நிறம் மாறுதல், எரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சரியான விட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சரி செய்ய முடியும்.
சன் ஸ்பாட்ஸ்: சூரிய ஒளி மற்றும் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் சேதத்தினாலும் உதட்டில் டார்க் ஸ்பாட் உண்டாக்கலாம்.
எனவே உங்களுக்கு உதட்டில் கரும்புள்ளிகள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக விட்டு விடாதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ற சிகிச்சை பெறுவது நல்லது.