பேச்சுத் திணறல் (Stuttering) பிரச்னை பல பிரபலங்களுக்குக் கூட இருந்திருக்கிறது. ரோமானிய பேரரசர் கிளாடியஸ், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ, ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் போன்றோர் பேச்சுத் திணறல் சிக்கல்களை எதிர்கொண்டவர்கள்தான். பேச்சுத் திணறல் ஏற்படுவதற்கான காரணங்களையும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
காரணங்கள்:
மரபணுக் காரணிகள்: பேச்சுத் திணறலுக்கு குடும்ப வரலாறும் ஒரு காரணம். சில மரபணுக்கள் திணறலை உருவாக்கும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
நரம்பியல் காரணிகள்: மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடும் ஒரு காரணம். பேச்சு மற்றும் மொழியை செயலாக்கும் விதத்தில் உள்ள வேறுபாடுகள் பேச்சுத் திணறலுக்கு வழிவகுக்கலாம். மூளையின் செயல்பாட்டில் உண்டாகும் மாறுபாடுகளே இதற்குக் காரணமாக அமைகின்றன.
வளர்ச்சிக் காரணிகள்: குழந்தையின் வளரும் பருவத்தில் அதனுடைய மொழி வளர்ச்சியின்போது சில சமயங்களில் திணறல் தோன்றலாம். உடல் சார்ந்த மற்றும் மூளைப் பகுதியின் வளர்ச்சி நிலைமைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சுற்றுச்சூழல் காரணிகள்: மன அழுத்தம் அல்லது பதற்றம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் திணறலைத் தூண்டலாம் அல்லது அதிகரிக்கலாம். சமூக சூழ்நிலைகளில் ஏற்படும் அழுத்தமும் காரணமாக இருக்கலாம். மேலும், உறவினர்கள் மற்றும் பெற்றோர்களால் மோசமாக விமர்சிக்கப்படும் குழந்தைகளுக்கு பேச்சுத் திணறல் பிரச்னை ஏற்படலாம்.
விரைவாகப் பேசுதல்: விரைவாகப் பேசும் தன்மை அல்லது சிக்கலான சொற்களுடன் உரையாட முயற்சிக்கும் குழந்தைகளுக்கு தங்கள் பேச்சு சரளத்தை நிர்வகிப்பது சவாலான காரியமாக இருக்கலாம்.
உளவியல் காரணிகள்: பேசும்போது சங்கடம், பதற்றம் அல்லது விரக்தி போன்ற உணர்வுகள் அதிக திணறலுக்கு வழிவகுக்கும். இருந்தாலும் இவை நிரந்தரமான காரணங்கள் அல்ல. சில சந்தர்ப்பங்களில் மட்டும் அரிதாகத் தோன்றுபவை.
உடல் ரீதியான காரணிகள்: பேச்சுத் தசைகளின் ஒருங்கிணைப்பில் உள்ள சிக்கல்கள் திணறலுக்குப் பங்களிக்கலாம். மூச்சுத்திணறல், குரல் நாண் இயக்கம், மற்றும் மூட்டு தசைகள் ஆகியவற்றின் சீரான ஒருங்கிணைப்பில் சிக்கல்கள் இருந்தால் பேச்சுத் திணறல் ஏற்படும்.
எதிர்கொள்ளும் விதங்கள்: பேச்சுத் திணறல் பிரச்னை இலகுவாக இருக்கும் குழந்தைகளுக்கு பயிற்சி மூலம் இவற்றை சரிப்படுத்த முடியும். தீவிரமாக இருந்தால் இதற்கு தகுந்த சிகிச்சை மற்றும் ஆதரவான சூழ்நிலை மிகவும் முக்கியம். பேச்சு மொழி நோயியல் நிபுணரை அணுகி அவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் தரும் பயிற்சிகள் மெல்ல மெல்ல இந்தக் குறைபாட்டின் தீவிரத்தை குறைக்கலாம்.
தளர்வு நுட்பங்கள்: பேசும்போது ஏற்படும் பதற்றத்தை குறைக்க ஆழமான சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மன அழுத்தத்தை குறைக்கும் நினைவாற்றல் மற்றும் தியானப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
பேச்சுப் பயிற்சி: தங்களுடைய பேச்சை செல்போனில் ரெகார்ட் செய்து எந்த இடத்தில் தடுமாறுகிறோம் என்பதைக் கண்டறிந்து அந்த மாதிரியான வார்த்தைகளை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசி பயிற்சி செய்யலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து பேசி பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.
சில உத்திகள்: தன்னைத்தானே நேர்மறையாக வலுவூட்டிக் கொள்ள வேண்டும். திணறல் என்பது பேச்சின் ஒரு பகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு பேசும்போது தடுமாற்றம் குறையும். பேசும்போது வேக வேகமாக பேசாமல், நிதானமாகப் பேசும்போது திணறலை கட்டுப்படுத்த உதவும். புதியவரிடம் பேச்சை ஆரம்பிக்கும்போது எளிதான வார்த்தைகளைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.
பேச்சுத் திணறல் என்பது சவாலான விஷயமாக இருக்கலாம். ஆனால், சரியான உத்திகள் மற்றும் ஆதரவு சிகிச்சை போன்றவற்றின் மூலம் இதை திறமையாக எதிர்கொள்ள முடியும்.