விரல்களுக்கு அழகு சேர்ப்பது நகம்தான். அது அடிபட்டாலோ, பெயர்ந்தாலோ வலி தாங்க முடியாத அளவு இருக்கும். அத்துடன் கை, கால் விரல்களின் அழகும் பாதிக்கப்படும். நடந்து செல்லும்பொழுது கல் தடுக்கினாலோ அல்லது கனமான பொருள் நம் கால்களில் விழுந்தாலோ நகம் பெயர்ந்து விடும். சில சமயம் நம்மை அறியாமல் வேகமாக நடந்து செல்லும்பொழுது ஸ்டூல் அல்லது நாற்காலியில் இடித்துக் கொண்டு வலியுடன் நகம் பெயர்ந்து விடும். அடிபட்டதில் நகத்துக்கு அடியில் இரத்தம் கட்டிக்கொண்டு கறுத்து விடும். இதற்கு வீட்டிலேயே எளிமையாக சிகிச்சைகள் செய்து சரிசெய்து விடலாம். ஆனால், பெரிய அளவில் அடிபட்டு நகம் பெயர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
இப்படி நகங்கள் பெயர்வதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் அடிபடுவதுதான் முக்கியமான காரணமாகும். ஆனால். சில சமயம் எந்த அடியும் படாமலே நகம் தானாகவே ஒடிந்து விழுவது உண்டு. இதற்குக் காரணம் பூஞ்சைத் தொற்று அல்லது சொரியாசிஸ் போன்ற பிரச்னைகள் காரணமாகலாம். சொரியாசிஸ் நோயில் நகத்துக்கு அடியில் இருக்கும் சரும செல்கள் இறந்து விடுவதால் நகம் தனியாகப் பிரிந்து சில நாட்களில் விழுந்து விடும். இதற்கு சொரியாசிஸுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, வெந்நீரில் நகங்களை நனைத்து காப்பாற்றுவது அவசியம்.
பூஞ்சை தொற்று அறிகுறிகள்: நகத்தின் அடிப்பகுதியில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு நகங்கள் பெயர்ந்து விடும். இது பொதுவாக முதியவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிபட்டால் நகத்தில் பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதற்கான அறிகுறிகள்: நகம் எளிதில் உடையும் தன்மையுடன் இருக்கும். நகத்தின் நிறம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்திற்கு மாறிவிடும். நகத்தின் நுனிப்பகுதி வீக்கம் அடைந்து வலியுடன் காணப்படும். பூஞ்சை தொற்று காரணமாக நகப்பகுதியில் இருந்து சீழ் வடியவும் செய்யும். இதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டி வரும்.
பூஞ்சை தொற்று ஏற்படாமல் இருக்க சில யோசனைகள்: நகங்களை அவ்வப்பொழுது சீராக வெட்டிவிட்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். நகத்துக்கு அடியில் மண், தூசிகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெளியில் செல்லும்பொழுது விரல்களை மறைக்கும் காலணிகளை அணிந்து செல்வது நல்லது. கை, கால் நகங்களில் அடிப்பட்டால் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். வெளியில் சென்று வந்ததும் கால்களை நன்கு அலம்பியதும் உலர்ந்த துணி கொண்டு துடைத்து ஈரம் இல்லாமல் உலர்வாகப் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
சில சமயம் நகம் முழுவதுமாக விழாமல் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த சமயத்தில் அவற்றை பிடுங்க முயற்சிக்கக் கூடாது. நாட்கள் செல்லச் செல்ல பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கும். அப்போது விடுபட்ட பகுதியை மட்டும் நீக்கி விடலாம். பெயர்ந்த நகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் அங்கு நோய் தொற்று ஏற்பட்டு விடும். நகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டால் சீழ் வருதல், வீக்கம், வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். சில சமயம் நகத்தை முழுமையாக இழக்க வேண்டி வரும். எனவே, நகங்களை முறையாகப் பராமரிப்பது அவசியம்.