கர்ப்பப்பை இறக்கம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்!

Cervical Prolapse
Cervical Prolapse
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பெண்களுக்கு கர்ப்பப்பை அதன் இருக்கும் இடத்தில் இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. அது இடம்பெயரும்போதுதான் பிரச்னை உண்டாகிறது. இருக்கும் இடத்திலிருந்து கீழிறிங்கி வருவதுதான் கர்ப்பப்பை இறக்கம் என்று கூறப்படுகிறது. கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும்பொழுது கர்ப்பப்பை கிழிறக்கம் உண்டாகிறது. இதனைப் பல நேரங்களில் பெண்கள் உணர்வதே இல்லை. சிலர் மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டுக் கொண்டு நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு செல்கிறார்கள்.

பூப்பெய்துவதில் தொடங்கி குழந்தை பெறுவது வரை முக்கிய பங்காற்றும் கர்ப்பப்பையில் நோய்த்தொற்று, நீர்க்கட்டி, கர்ப்பப்பை இறக்கம் போன்ற பிரச்னைகள் உண்டாகும். கர்ப்பப்பை சாதாரணமாக 2 சென்டி மீட்டர் அளவு இருக்கும். பூப்படையும்பொழுது ஐந்தாறு சென்டி மீட்டர் வரை வளரும். பிரசவ சமயத்தில் 5 கிலோ எடையுடன் 30 சென்டி மீட்டர் நிளத்திற்கு விரிவடையும். பிரசவத்திற்குப் பிறகு சுருங்கி மீண்டும் பழைய நிலைக்கு வரும்.

கர்ப்பப்பை இறக்கம் ஏற்படக் காரணங்கள்:

பிரசவத்திற்குப் பிறகு போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது காரணமாகலாம்.

சிலருக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஹார்மோன் சுரப்பு குறைவதால் கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசைகள் பலவீனமடைந்து அதனால் கர்ப்பப்பை இறக்கம் ஏற்படும்.

அதிக உடல் எடை காரணமாக வயிற்றில் உள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம் காரணமாக இறக்கம் ஏற்படும்.

ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.

அதிக எடையுள்ள குழந்தை பிறக்கும்பொழுது பிரசவத்தில் குழந்தையை அதிக அழுத்தம் தந்து வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்திற்குக் காரணம்.

முக்கியமாக, பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே அடுத்த கர்ப்பம் தரிப்பதும், அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம் ஏற்படுவதும் ஒரு காரணமாக அமைகிறது.

இதற்கான அறிகுறிகள்:

சிறுநீர் அதிக முறை வெளியேறுவது: கர்ப்பப்பை அருகில் இருக்கும் குடல், சிறுநீரகப்பை, மலக்குடல் மூன்றும் அருகில் இருப்பதால் இவை அழுத்தும் பொழுது சிறுநீர் பிரச்னை உண்டாகும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, சிலருக்கு இருமினாலோ, தும்மினாலோ கூட சிறுநீர் வெளியேறும் நிலை ஏற்படும்.

சிறுநீர்ப்பையும், மலக்குடலும் சேர்ந்து அழுத்தப்பட்டு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாவது, மலச்சிக்கல் ஏற்படுவது போன்றவை கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இடுப்பில் வலி: கர்ப்பப்பை இறங்கும்பொழுது சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சேர்த்து இழுப்பதால் இடுப்பில் வலி உண்டாகும். இயல்பாக வரும் இடுப்பு வலிக்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர முடியும். சாதாரணமாக வரும் இடுப்பு வலியைப் போல் இல்லாமல், இடுப்பில் சற்று அழுத்தமாக கை வைத்து நின்றால் வலி குறைவது போல் தோன்றும்.

அரிப்பு, உலர்வுத் தன்மை: கர்ப்பப்பை இறக்கத்தின் காரணமாக பெண் உறுப்பில் உலர்வுத் தன்மை, அரிப்பு, கர்ப்பப்பை வாய் புண் ஏற்பட்டு தொற்றுகள் ஏற்படுவது போன்றவை ஏற்படும். மெனோபாஸ் காலத்தில்தான் இந்த பிரச்னையை பெண்கள் அதிகம் சந்திக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நிறுவன கலாசார தினத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் தெரியுமா?
Cervical Prolapse

வெள்ளைப்படுதல்: வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் சிலருக்கு மாதவிடாய்க்கு பின்பும் வெள்ளைப்படுதல் இருப்பது சாதாரணமானதுதான். ஆனால், எல்லா நேரங்களிலும் எப்போதும் வெள்ளைப் போக்கு இருந்தால் அது கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.

சிகிச்சை முறைகள்: ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு பிசியோதெரபி பயிற்சிகள் மூலம் இது சரி செய்யப்படுகிறது. இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரை என எதுவும் கொடுக்கப்படுவதில்லை. சில வகையான உடற்பயிற்சிகள் மற்றும் தேவைப்பட்டால் சில சமயம் அறுவை சிகிச்சையும் அளிக்கப்படும்.

மூன்றாம் நிலையில் வயது முதிர்ந்தவர்களாக இருந்தால் பெரும்பாலும் கர்ப்பப்பையை அகற்றுவதும், வயது குறைந்தவர்களாக இருந்து குழந்தை பெற வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு கர்ப்பப்பையை மேலே தள்ளி வைத்து தையல் போடுவதும் என்று வயதுக்கேற்ற சிகிச்சை முறைகள் உள்ளன.

மேற்கண்ட அறிகுறிகள் எல்லாம் கர்ப்பப்பை இறக்கத்திற்கான அறிகுறிகள் என்றதும் அச்சப்பட வேண்டாம். அதேசமயம் அலட்சியப்படுத்தவும் வேண்டாம். ஏனெனில், கர்ப்பப்பை இறக்கம் ஆரம்ப நிலைகளில் தீவிரமான அறிகுறிகளை வெளிப்படுத்தாது. கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது எளிது. அதனை அலட்சியப்படுத்த கர்ப்பப்பையை எடுக்கும் நிலை ஏற்படலாம். 40 வயதுக்கு மேல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கர்ப்பப்பை குறித்த முழு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com