சின்னம்மை அபாயம்… தடுப்பு & முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! 

Chickenpox Body
Chickenpox

கோடைகாலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் சின்னம்மையும் ஒன்று. குறிப்பாக இது குழந்தைகளை முதன்மையாக பாதிக்கும் என்பதால், அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இப்பதிவில் சின்னம்மை என்றால் என்ன? அது வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க. 

சின்னம்மை: ஆங்கிலத்தில் சிக்கன் பாக்ஸ் என அழைக்கப்படும் சின்னம்மை, Varicella Zoster Virus மூலமாக ஏற்படுகிறது. இது சுவாசம் மூலமாகவோ அல்லது இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளங்களில் இருந்து வெளிவரும் திரவத்தின் நேரடி தொடர்பு மூலமாகவோ எளிதாகப் பரவுகிறது. இதன் பொதுவான அறிகுறிகளில் சருமம் சிவந்து போதல், அரிப்பு, சிறிய திரவம் நிறைந்த கொப்புளங்கள், காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும். இது பொதுவாக முகம், மார்பு, முதுகு போன்ற இடங்களில் தோன்றும். 

தடுப்பு நடவடிக்கைகள்: 

சிக்கன் பாக்ஸ் தடுப்பதற்கான சிறந்த வழி தடுப்பூசி. இப்போதெல்லாம் குழந்தைகள் பிறக்கும்போதே அம்மை ஊசி போட்டு விடுகின்றனர். இந்த தடுப்பூசி சின்னம்மை பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மட்டுமில்லாமல், அந்த வைரஸ் பரவும் அபாயத்தையும் குறைக்கிறது. 

சிக்கன் பாக்ஸ் பரவாமல் தடுக்க நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். அவ்வப்போது சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட நபருடன் இருப்பவர்கள் இதை அவ்வப்போது செய்ய வேண்டும். நோய்த் தொற்றுக்களைத் தடுக்க அம்மையால் ஏற்பட்ட கொப்புளங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். 

உங்கள் வீட்டில் ஒருவருக்கு சிக்கன் பாக்ஸ் இருந்தால், வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க அவர்களைத் தனிமைப்படுத்துவது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனம் கொண்டவர்களை பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து விலக்கி வைப்பது நல்லது. 

சிக்கன் பாக்ஸ் கொப்புளங்கள் அரிப்பைத் தூண்டும். ஆனால் அத்தகைய கொப்புளங்களை சொரியக் கூடாது. இது நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும். நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். ஒருபோதும் சொரிந்து விடாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
கோடை காலத்தில் உங்கள் கண்களைப் பாதுகாப்பதற்கான வழிகள்! 
Chickenpox Body

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 

  • கோடை மாதங்களில் சிக்கன் பாக்ஸ் தவிர மற்ற எல்லா பாதிப்புகளில் இருந்தும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலத்தில் நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று பார்க்கும்போது,

  • கோடைகாலத்தில் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிகமாக வெயிலில் செல்ல வேண்டாம். 

  • வெப்பமான தருணங்களில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நீரேற்றத்துடன் இருந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

  • கோடைகாலத்தில் அதிக வெப்பநிலையால் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். எனவே சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும். முடிந்தவரை குளிரூட்டப்பட்ட சூழலில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

  • கோடைகாலத்தில் பூச்சிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். எனவே முறையான பூச்சி விரட்டியைப் பயன்படுத்தி பாதுகாப்பான ஆடைகளை அணியவும். 

மேற்கூறிய விஷயங்களில் கவனமாக இருந்தாலே, கோடைகாலத்தில் எல்லாவிதமான நோய்களில் இருந்தும் பாதுகாப்புடன் இருக்கலாம். எனவே இவற்றைப் பின்பற்றி ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com