சமையலுக்கு சுவையூட்டவும், மசாலா வகைகள் தயாரிப்பதிலும் முக்கியப் பொருளாக சேர்க்கப்படுவது கிராம்பு. வாசனை திரவியங்கள், சோப்பு தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனை டீ வடிவில் எடுத்துக்கொள்ள நிறைய நன்மைகளைப் பெறலாம்.
மருத்துவர்களே தொண்டைப்புண் இருக்கும்போது கிராம்பு டீயை குடிக்க பரிந்துரைக்கின்றனர். கிராம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் ஆகியவை உள்ளன. பொதுவாக, ஜலதோஷம் முதல், சளி, தொண்டைக்கட்டு வரை உள்ள பிரச்னைகளுக்கு இந்தக் கிராம்பு டீ நல்ல பலன் தருகிறது. வயிறு உப்புசம், செரிமானத்தில் பிரச்னை, வாய்வு, மலச்சிக்கல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கிராம்பு பலன் அளிக்கும்.
கிராம்பு டீ வயிற்றுப்புண்கள், அல்சர் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சைனஸ் பிரச்னைகள் இருப்பவர்கள் கிராம்பு டீ குடிப்பது நல்லது. இதில் உள்ள யூஜெனால் சளியை அகற்ற உதவும். உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றவும், சருமப் பிரச்னைகளை போக்கவும் உதவுகிறது.
நாள்பட்ட மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற கிராம்பு டீ உதவுகிறது. மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கவும் உதவி புரிகிறது. கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் கிராம்பு டீயை குடிக்க உடலில் இருக்கும் பெரும்பாலான பிரச்னைகளைப் போக்கி விடலாம்.
சரி, இனி கிராம்பு டீ எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போமா? நான்கு கிராம்பை எடுத்து நன்கு நசுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு சூடானதும் அதில் நசுக்கி வைத்திருக்கும் கிராம்பை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றியதும் இறக்கி அந்த தண்ணீரை வடிகட்டி சுவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த கிராம்பு டீயை உணவுக்குப் பிறகு பருக வயிறு லேசானது போல் உணரலாம்.