உங்க வீட்டு பக்கத்துல இந்த மரம் இருக்கா? ஆரோக்கியம் முதல் நிலத்தடி நீர் வரை காலி!

பார்க்க பசுமையாக இருந்தாலும், மனித ஆரோக்கியத்திற்கும் நிலத்தடி நீருக்கும் உலை வைக்கும் கோனோகார்பஸ் மரங்களின் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
Conocarpus tree dangers
Conocarpus tree dangersAI Image
Updated on

அட, இயற்கைக் காற்று சுவாசிக்கணும்னு பூங்காவுக்கு போறீங்களா? அது மட்டும் இல்லைங்க. நேஷனல் ஹைவேல டிராவல் பண்றீங்களா? தொலைவா போகும்போது, கண்ணுக்கு பசுமையா இருக்கு நல்லா நிழலா இருக்கு அப்படின்னு அங்க இருக்கிற மரத்தடியில் உட்கார்ந்து ஜாலியா ஒரு போர்வையை விரிச்சு உட்கார்ந்து சாப்பிடுறீங்களா? கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...

கோனோகார்பஸ் (Conocarpus) என்பது பொதுவாக அலங்கார மரமாக நகரங்களில் நட்டுவரப்படும் ஒரு வகை மரம். இதன் அறிவியல் பெயர் Conocarpus erectus. தமிழில் சிலர் இதை 'பட்டன் மரம்' என்றும் கூறுவார்கள்.

இது சாலையோரம் மற்றும் பூங்காக்களில் அதிகம் நடப்படுகிறது. அடர்த்தியான இலைகள் காரணமாக அதிக நிழல் தருகிறது.

இந்த செடி/மரம் மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஆபத்தானது.

​இவை பார்ப்பதற்கு எப்போதும் பசுமையாகவும், மிக வேகமாகவும் வளர்வதால், ஆரம்பத்தில் சாலை ஓரங்களிலும் பூங்காக்களிலும் அழகுக்காகவும், நிழலுக்காகவும் அதிக அளவில் நடப்பட்டன.

ஆனால், இதன் தீமைகள் காரணமாக குஜராத், தெலுங்கானா மற்றும் ஆந்திரா போன்ற பல்வேறு இந்திய மாநிலங்கள் இந்த மரத்திற்கு ஏற்கனவே முழு தடை விதித்துள்ளன. தமிழகத்திலும் இதன் ஆபத்துகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

Conocarpus
Conocarpus Image credit: down to earth

இந்த மரத்தால் ஏற்படும் முக்கிய ஆபத்துகள்:

​1. மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் (Health Hazards):

சுவாசப் பிரச்சனைகள்: இந்த மரங்கள் குளிர்காலத்தில் பூத்து, காற்றில் அதிகளவிலான மகரந்தத் துகள்களை (Pollen) பரப்புகின்றன. இந்த மகரந்தத் துகள்களைச் சுவாசிப்பதால் மக்களுக்குத் தொடர் இருமல், சளி, கடுமையான சரும அலர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

​2. நிலத்தடி நீர் உறிஞ்சுதல் (Groundwater Depletion):

​இத்தாவரம் நிலத்தில் உள்ள தண்ணீரை மிக அதிகளவில் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாக பாதாளத்திற்குச் சென்றுவிடும். அருகில் இருக்கும் மற்ற உள்நாட்டுத் தாவரங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் அவை அழிந்துபோகும்.

3. கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் (Infrastructure Damage):

​கோனோகார்பஸ் மரத்தின் வேர்கள் மிக ஆழமாகவும், பக்கவாட்டிலும் ஆக்ரோஷமாகப் பரவக்கூடியவை.

​இவை நிலத்தடியில் இருக்கும் குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடை இணைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்களை ஊடுருவி, உடைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், வீட்டின் சுவர்களுக்கு அருகில் இருந்தால் அவற்றின் அஸ்திவாரத்தையும் பலவீனப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
இடி சத்தம் கேட்டா பயப்படுவீங்களா? அப்போ உங்களுக்கு Astraphobia இருக்கலாம்!
Conocarpus tree dangers

4. சுற்றுச்சூழல் சமநிலை சீர்குலைவு (Green Desert):

​இந்த மரம் நம் நாட்டுப் பறவைகள், பூச்சிகள் அல்லது விலங்குகளுக்கு எந்த விதத்திலும் பயன் தருவதில்லை. இதன் பழங்களையோ, இலைகளையோ பறவைகளும் பூச்சிகளும் உண்பதில்லை. இதனால், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் உணவுச் சங்கிலி (Food web) பாதிக்கப்பட்டு, அந்த இடமே ஒரு 'பசுமைப் பாலைவனமாக' மாறிவிடுகிறது.

மாற்று வழிதான் என்ன?

எங்கே போவதாக இருந்தாலும், மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். நச்சுக் காற்றினை சுவாசிப்பதை ஓரளவு தவிர்க்கலாம்.

உங்கள் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது பொது இடங்களிலோ மரங்களை நட விரும்பினால், இந்த கோனோகார்பஸ் மரத்தைத் தவிர்த்து, நம் மண்ணிற்கு ஏற்ற வேப்ப மரம், புங்க மரம், அரச மரம் அல்லது பூவரசு போன்ற பாரம்பரிய உள்நாட்டு மரங்களை நடுவது மனிதர்களுக்கும், இயற்கைக்கும் நன்மை பயக்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com