
சமீபத்தில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் இறந்த செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த குழந்தைகளின் சிறுநீரக திசுக்களில் Diethylene glycol என்ற வேதிப்பொருள் இருந்ததாக கண்டுப்பிடித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு இருமல் மருந்துக் கொடுக்கலாமா? கூடாதா? என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகளுக்கு சில விதமான பிரச்னைகளுக்கு மட்டுமே இருமல் மருந்து தேவைப்படும். நிறைய சமயங்களில் இருமல் தானாகவே படிப்படியாக சரியாகிவிடும். எந்த வகையான இருமல் மருந்து (Cough medicine), எந்த வயது குழந்தைக்கு, எந்த Combination ல் கொடுக்க வேண்டும் என்று நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. சில இருமல் மருந்துகளை 12 வயதிற்கு மேல் தான் கொடுக்க வேண்டும். இன்னும் சில மருந்தை 4 வயதிற்கு மேல் தான் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உண்டு.
எனவே, நீங்களே மருந்து கடைகளில் இருமல் மருந்து(Cough medicine) வாங்கி பயன்படுத்தாமல் முறையாக நல்ல குழந்தை நல மருத்துவரை கலந்து ஆலோசித்து விட்டு வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. பொதுவாக இருமல் மருந்தில் மருந்தை கரைப்பதற்கும், தொண்டை இதமாக இருப்பதற்கும் கிளிசெரின்(Glycerine) கலப்பார்கள். இது பாதுகாப்பான மருந்து பொருள்.
ஆனால், கம்பெனிகாரர்கள் பேராசைப்பட்டோ அல்லது விலை மலிவான கிளிசெரினை நம்பிக்கையில்லாத இடங்களில் இருந்து வாங்கும் போது அதில் Diethylene Glycol என்ற நச்சுப்பொருள் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை சரியாக பரிசோதிக்காமல் பயன்படுத்தினால் அந்த மருந்து கலந்திருந்தால், அந்த நச்சுப்பொருள் குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்து சிறுநீரக செயலிழுப்பை(Kidney failure) ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
அது தான் இந்த சம்பவத்தில் நடந்திருக்கிறது. எனவே, அடுத்தமுறை நீங்களாக இருமல் மருந்தை கடையில் கேட்டு வாங்காதீர்கள். முறையாக நல்ல குழந்தை நல மருத்துவரை கலந்து ஆலோசித்து விட்டு வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. இருமல் மருந்து மட்டுமில்லாமல் சாதாரண பேராசிட்டமால் போன்ற நிறைய சிரப்களில் கிளிசெரின் பொதுவாக கலக்கப்படுகிறது. இதை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கம் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கடமையாகும். இதுப்போன்ற சம்பவம் இனி இந்தியாவில் நிகழாமல் இருக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)