மஞ்சள் தூளில் அபாயம்: ஈய அளவு அதிகரிப்பு!

turmeric powder
Turmeric Powder
Published on

இந்திய மசாலா பொருட்களில் முதல் இடம் வகிப்பது மஞ்சள் தூள். மணத்திற்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை காக்கவும் இது உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இந்தியாவின் முதன்மையான கிருமி நாசினியாக இது பயன்படுத்தப்படுகிறது, மேலும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

இதில் குர்குமின் எனப்படும் ஒரு வேதிப் பொருள் நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றியாகும். இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இவ்வளவு சிறப்பு மிகுந்த மஞ்சள் தூளில் கலப்படம் அதிகரித்துள்ளது என்ற செய்தி மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

சமீபத்திய ஒரு ஆய்வில், இந்தியாவின் பாட்னா மற்றும் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் பெஷாவரில் இருந்து மஞ்சள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அதில் பாதுகாப்பான வரம்புகளை மீறி, ஆபத்தான அளவுகளை தாண்டி ஈயம் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.1,000 மைக்ரோகிராம்/கிராம் (μg/g) ஐ விட ஆபத்தான அளவு ஈயத்தைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

உணவுக்கான மஞ்சள் தூளில் வண்ணப் பூச்சுக்காக பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படும் மஞ்சள் நிறமியான ஈய குரோமேட்டுடன் கலக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க விற்பனை ஆகும் மஞ்சள் தூளில் உள்ள ஈய அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை தாண்டி மோசமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான வரம்பை 200 மடங்கு தாண்டியுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நிர்ணயித்த தரங்களின்படி, கவுகாத்தி மற்றும் சென்னையிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளிலும் இந்த வரம்பு மீறப்பட்டுள்ளது. மஞ்சள் தூள்களில் ஈயத்தின் முக்கிய ஆதாரமாக ஈய குரோமேட் உள்ளது. இது வண்ணப்பூச்சுகள், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பூச்சுகளில் பயன்படுத்தப்படும் மஞ்சள் நிறமி ஆகும்.

ஆய்வின்படி, இந்த ஆபத்தான அளவுகளில் ஈயத்துடன் மஞ்சளை உட்கொள்வது ஈய விஷத்திற்கு பங்களிக்கும். இது பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது.

ஈயம் என்பது எலும்பில் சேமிக்கப்படும் கால்சியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கன உலோகமாகும். இந்த உலோகம் உடலிலும் இரத்தத்திலும் கலக்கும் போது மோசமான உடல்நிலைகளை உருவாக்குகிறது. மனநிலை மாற்றங்கள், எரிச்சல், தலைவலி மற்றும் தூக்கக் கலக்கம் உள்ளிட்ட நடத்தை மாற்றங்களையும் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மூளையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது வயிற்று வலி, பிடிப்புகள், பசியின்மை மற்றும் எடை இழப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. ஈயம் ஹீமோகுளோபின் உற்பத்தியில் தலையிடுவதாகக் கூறப்படுகிறது. இது சோர்வு மற்றும் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் விளைவிக்கிறது. இதயம் தொடர்பான நோய்களுக்கு முக்கிய காரணியாக உள்ளது. நரம்புகளில் சிதைவுகளை உண்டாக்கி மனிதனை பலவீனப் படுத்துகிறது. 

ஈய வெளிப்பாடு சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது நீண்டகால சிறுநீரக நோய்க்கு வழிவகுக்குகிறது. ஈய உடலில் சேர்ந்தால் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் உறுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது.

கலப்பட அபாயங்களைக் குறைக்க சந்தைகளில் நேரடியாக மஞ்சள் கிழங்குகளை வாங்கி உலர்த்தி அதை பொடியாக்கி உபயோகிப்பது உடலுக்கு நன்மை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com