

இன்றைய நவீன உலகில் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிறோமோ இல்லையோ, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் என்ன வந்திருக்கிறது என்று பார்ப்பதுதான் முதல் வேலையாக இருக்கிறது. இது நமக்கு உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல, இடைவிடாத இணையப் பயன்பாடு நம் மூளையின் ஆரோக்கியத்தைச் சிறுகச் சிறுகச் சிதைத்து வருகிறது. நாம் புத்திசாலி என்று நினைத்துப் பயன்படுத்தும் இந்தக் கருவி, உண்மையில் நம் மூளையை மழுங்கடித்து, வேகமாக முதுமைப் பருவத்திற்குத் தள்ளுகிறது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
கவனம் சிதறடிக்கும் இணையம்!
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வின்படி, நாம் ஸ்மார்ட்போனில் பேசும் அழைப்புகளோ அல்லது அனுப்பும் சாதாரணக் குறுஞ்செய்திகளோ மூளையைப் பெரிதாகப் பாதிப்பதில்லை. ஆனால், 24 மணி நேரமும் இணையத்துடன் இணைந்திருப்பதுதான் ஆபத்தை விளைவிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் ஸ்க்ரோல் செய்வது, அடுத்தடுத்து வரும் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது போன்றவை மூளையின் நரம்பு மண்டலத்தைச் சோர்வடையச் செய்கின்றன. இதனால் கவனம் சிதறி, ஒரு விஷயத்தில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்தத் தாக்கத்தை நிரூபிப்பதற்காகச் சுமார் நானூறு நபர்களைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான சோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு மொபைல் டேட்டா மற்றும் வைஃபை வசதிகள் துண்டிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் போனில் பேசவும், எஸ்எம்எஸ் அனுப்பவும் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த இரண்டு வார முடிவில் கிடைத்த முடிவுகள் மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இணையம் இல்லாமல் வாழ்ந்த அந்த நாட்களில், அவர்களின் மூளைச் செயல்பாடு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருந்தது.
இளமையாகும் மூளை!
வெறும் 14 நாட்கள் இணையத்திலிருந்து விலகி இருந்ததனால், அந்த நபர்களின் மூளை சுமார் 10 வயது குறைந்தது போலச் சுறுசுறுப்பாக மாறியது. அந்தளவிற்கு அவர்களின் மூளை புத்துணர்ச்சி பெற்றது. இதை மருத்துவ நிபுணர்கள் Brain Reboot என்று வர்ணிக்கிறார்கள். இணையத்தில் மூழ்கிக் கிடக்காததால், அவர்கள் சக மனிதர்களுடன் நேருக்கு நேர் பேசத் தொடங்கினார்கள். இது அவர்களின் மன அழுத்தத்தைப் பெருமளவு குறைத்தது.
மன அமைதி, தூக்கம்!
தொடர்ச்சியான நோட்டிஃபிகேஷன் சத்தங்கள் இல்லாததால், அவர்கள் பதற்றமின்றி ஆழ்ந்து உறங்க முடிந்தது. தூக்கமின்மை பிரச்சனைக்குத் தீர்வு தேடி அலைபவர்களுக்கு, இணையத்தைத் துண்டிப்பதே மிகச்சிறந்த மருந்தாகும். இந்தச் சோதனை முடிந்த பிறகும் கூட, பல மாதங்களுக்கு அவர்கள் மனத் தெளிவுடனும் உற்சாகத்துடனும் இருந்தார்கள். இது மூளையின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு எளிய வழியாகும்.
தொழில்நுட்பம் நம்மை அடிமைப்படுத்த விடாமல், நாம் தொழில்நுட்பத்தை ஆளக் கற்றுக்கொள்ள வேண்டும். வருடக் கணக்கில் இணையத்தில் தொலைத்த நிம்மதியை, வெறும் இரண்டு வார இடைவெளியில் நம்மால் மீண்டும் பெற முடியும். உடனே இந்த டிஜிட்டல் விரதத்தைத் தொடங்கி, உங்கள் மூளையை இளமையாக்குங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)