தற்கால வாழ்க்கை முறையில் நாம் பெரும்பாலான நேரத்தை அமர்ந்த நிலையில் கழிக்கிறோம். அலுவலகத்தில் வேலை செய்வது, கணினி முன்பு நேரத்தை செலவிடுவது, டிவி பார்ப்பது போன்றவை நம்மை சோபா மற்றும் நாற்காலியில் அதிக நேரம் அமர வைக்கும் சில அன்றாட செயல்பாடுகளாகும். சிறிது நேரம் அமர்ந்த நிலையில் இருப்பது நமக்கு ஓய்வெடுக்க உதவலாம் என்றாலும், அதிக நேரம் அமர்ந்திருப்பது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்தப் பதிவில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிய விரிவான பார்வையைக் காணலாம்.
உடல் ரீதியான பிரச்சினைகள்:
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது முதுகு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலி மற்றும் பிடிப்புகளை ஏற்படுத்தும். இது காலப்போக்கில் முதுகுத்தண்டு தேய்மானம் மற்றும் முதுகு வலி போன்ற தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
நாம் அதிகநேரம் அமர்ந்திருக்கும்போது நமது உடல் கலோரிகளை எரிக்காது. இது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்து உடற்பருமன் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது ரத்த ஓட்டத்தைக் குறைத்து கால்களில் வீக்கம் மற்றும் உணர்வின்மையை ஏற்படுத்தும்.
அமிர்த நிலையில் இருக்கும்போது உடல் செயல்பாடு இல்லாததால் ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அளவு அதிகரிக்கக்கூடும். இது நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
அமரும்போது தவறான முறையில் அமர்வது கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும்.
கணினி திரைகளை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பதால் கண் அழுத்தம், கண் வறட்சி மற்றும் பார்வை பிரச்சனைகள் ஏற்படலாம்.
மனரீதியான பிரச்சினைகள்:
அதிக நேரம் அமர்ந்திருப்பது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கக்கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், உடல் செயல்பாடு இல்லாதது கவனம் மற்றும் நினைவாற்றல் குறைவை ஏற்படுத்தி, நம்மை எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட விடாது. வெகு நேரம் தனிமையாக எந்த உடல் செயல்பாடும் இல்லாமல் இருப்பது மனச்சோர்வு அபாயத்தை அதிகரிக்குமாம்.
ஒருவேளை நீங்கள் அதிக நேரம் அமர்ந்தபடி வேலை செய்யும் நபராக இருந்தால், குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து கொஞ்சம் நடக்கவும். நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் இடத்தை அவ்வப்போது மாற்றவும். அமரும்போது முதுகெலும்பை நேராக வைத்து, கணினி திரையை உங்கள் கண் மட்டத்திற்கு கொஞ்சம் மேலே இருக்கும்படி பொருத்தினால், நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பாதிப்புகளை சற்று குறைக்கலாம்.
எனவே, அதிக நேரம் அமர்ந்திருப்பது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல தீங்குகளை விளைவிக்கும் என்பதை புரிந்து கொண்டு, அன்றாட வாழ்க்கையில் போதுமான அளவு உடல் செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.