
கோடை காலத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதிகம் பாதிக்கும் டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீர் சத்து குறைபாடு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம். சிறுநீரக கற்கள் உருவாகலாம். தலைவலி, மயக்கம், கவனமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தசைகளில் வலியை உண்டாக்கும்.
நீரிழப்பு காரணங்கள்:
நம் உடலுக்கு தேவையான நீரை விட குறைவாக உட்கொள்வதன் மூலமோ அல்லது அதிக அளவு நீர் நம் உடலில் இருந்து வெளியேறுவதன் மூலமோ நீரிழப்பு ஏற்படுகிறது.
அதிகப்படியான வியர்வை, வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிக உடல் உழைப்பு போன்றவை நீர் இழப்பு ஏற்பட காரணங்களாகும்.
காய்ச்சல், நீரிழிவு போன்ற சில நோய்கள் காரணமாகவும் நீரிழப்பு ஏற்படலாம்.
அறிகுறிகள்:
நீரிழப்பின் முதல் அறிகுறி தாகம் எடுப்பது.
சிறுநீர் குறைவாக வெளியேறுவது மற்றும் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருப்பது நம் உடலில் நீரிழப்பை குறிக்கும்.
வயதானவர்களுக்கு தாகத்தை உணரும் அறிகுறி இல்லாமல் கூட நீரிழப்பு ஏற்படலாம்.
தலைசுற்று, சோர்வாக உணர்வது, களைப்பு, எரிச்சல், கருப்பு அல்லது ரத்தம் தோய்ந்த மலம் கழித்தல் போன்றவை வயதானவர்களுக்கு நீரிழப்பின் பொதுவான அறிகுறிகளாகும்.
குழந்தைகளுக்கு நாக்கு உலர்ந்து போவதும், வாய் வறட்சியுடன் காணப்படுவதும், சருமம் உலர்ந்து காணப்படுவதும் அறிகுறிகளாகும்.
குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இருப்பின் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
நீரிழப்பை தவிர்க்க சில எளிய வழிமுறைகள்:
வெப்பமான காலநிலையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை எனில் இந்த பாதிப்பு ஏற்படும். நாளொன்றுக்கு மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் பருகுவதன் மூலம் நீரிழப்பை தடுக்கலாம்.
கோடைகாலத்தில் அதிக உடற்பயிற்சி செய்வதை குறைத்துக் கொண்டு உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளலாம்.
எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பிய இளநீர் போன்ற பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான நீர்சத்தைப் பெறலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு பருக உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீர்மோர், பானகம், இளநீர், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், சூப்புகள் தரலாம்.
குளிர்பானங்களைத் தவிர்த்து பழச்சாறுகள் தருவது நல்ல பலனளிக்கும்.
நீரிழப்பு ஏற்படாமல் இருக்க ஆல்கஹால் போன்ற பானங்களையும், அதிகப்படியான இனிப்பு, காஃபின் நிறைந்த பொருளையும் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கடுமையான நீரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று தகுந்த சிகிச்சை மேற்கொள்வது மிக மிக அவசியம்.