நொச்சி இலை நுரையீரலில் நண்பன் என்று அழைக்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் நொச்சி இலையுடன் கற்பூரவள்ளி இலையும் சேர்த்து ஆவி பிடித்தாலே இறுகிக் கிடக்கும் நெஞ்சு சளி கரைய ஆரம்பிக்கும். வேப்பிலையை போலவே இந்த இலையும் நீரில் தேய்த்து குளித்து வந்தால் உடல் வலி தீர்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
கடுமையான உடல் உழைப்புக்குப் பிறகு உடலில் உண்டாகும் வலியை குறைக்க நொச்சி இலை உதவுகிறது. அதேபோன்று தசை பிடிப்பு, தசை வலி, உடல் சோர்வு இருக்கும்போது நொச்சி இலை உதவும். நீரில் இரண்டு கைப்பிடி நொச்சி இலைகளை சேர்த்து லேசாகக் கொதிக்க விட்டு வெதுவெதுப்பானதும் அந்த நீரில் குளித்து வர உடல் வலி சிட்டாய் பறந்து போகும். மேலும், உடலுக்கு புத்துணர்ச்சி தேவையாக இருந்தால் நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் பனைவெல்லம் கலந்து குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடலில் இருக்கும் கப நோய்களை விரட்டியடிக்க நொச்சி இலை பயன்படுத்தப்படுகிறது. ஜலதோஷம், மூக்கடைப்பு முக்கியமாக சைனஸ் தலைவலிக்கு விரைவாக தீர்வளிக்கிறது நொச்சி இலை. சைனஸ் தலைவலி இருப்பவர்கள் நொச்சி இலையுடன் சிறிது அளவு சுக்கு சேர்த்து அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எதுவுமே இல்லை என்றாலும் நொச்சி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி நல்ல சூடு பதம் இருக்கும்போதே துணியில் முடிந்து அதை கொண்டு ஒத்தடம் கொடுத்தாலும் நீங்கும்.
இரைப்பு நோய் இருப்பவர்கள் நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, லவங்கம் சேர்த்து அப்படியே சாப்பிட்டாலோ அல்லது கஷாயமாக்கிக் குடித்தாலோ இரைப்பு நோய் தீவிரமாகாமல் குறையும். தலைவலி மற்றும் சளியால் வரும் மூக்கடைப்புக்கு தீர்வாக நொச்சி இலை பயன்படுகிறது. நொச்சி இலையை காயவைத்து பொடித்து வைக்க வேண்டும். சற்று அகலம் குறைந்த மண் சட்டியில் நெருப்பை மூட்டி தணலாக்கி அதில் நொச்சிப்பொடிகளை சேர்த்து அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நொச்சி இலையை கசக்கி அதன் சாறை சுத்தமான வெள்ளை துணியில் போட்டு அதை மூக்கில் முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு நீங்கும். நொச்சி இலையை துணியில் அடைத்து அதை தலையணையாக பயன்படுத்தினால் தூக்கம் நன்றாக வரும். சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் தினசரி இந்த தலையணையை பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும். கழுத்து வலி, கழுத்தில் நெறி கட்டுதல், நரம்பு கோளாறுகள் என அவதிப்படுபவர்களுக்கும் இந்த தலையணை மருத்துவம் கைகொடுக்கும்.
கட்டி வீக்கத்திற்கு நொச்சி இலைகளை வதக்கி கட்டி மேல் வைத்துக் கட்டினால் அவை கரைந்து போகும். நொச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கும். கை, கால், முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணி வைத்துக் கட்டிக் கொள்ளலாம். புண் காயங்களுக்கு நொச்சி இலைச்சாறை நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து அதை எடுத்து வைத்துக்கொண்டு தினமும் தேய்த்து வர புண் ஆறி விடும்.