நாம் தினசரி பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கும்போது சிறிய பிரேக் எடுக்கும் வேளையில் ஒரு கப் டீ அனைவரது நண்பனாக இருக்கும். சிலர் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது, காலை எழுந்தவுடன் அல்லது சோர்வாக இருக்கும் போது டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். இதிலும் சிலர் எந்தக் காரணமும் இன்றி டீ குடிப்பார்கள். இப்படி இந்தியர்களின் வாழ்வில் டீ ஒரு அங்கமாகவே உள்ளது.
நாம் அதிகமாக டீ குடிக்கும் அதே வேளையில் அதில் உள்ள நன்மை, தீமைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். நாம் எந்த நேரத்தில் டீ குடிக்கிறோமோ அதற்கு ஏற்றவாறான விளைவுகளை அது கொடுக்கிறது. காலையில் டீ தூக்கத்தை விரட்டுவது போல, மாலை நேரத்தில் டீ குடிப்பது நமக்கு ஆற்றலைத் தருகிறது. அதேபோல, மதிய நேரத்தில் டீ குடித்தால் அது நம் வயிற்றை இலகுவாக்கும். மேலும் டீ குடிக்கும்போது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கும் சில உணவுகளையும் நாம் எடுத்துக் கொள்கிறோம். இந்த பதிவில் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் கலந்த பொருட்கள்: தேநீரில் ஏற்கெனவே காஃபீன் என்ற பொருள் உள்ளது. இதுதான் நமக்கு ஆற்றலை வழங்குகிறது. எனவே, டீயுடன் மஞ்சள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கலாம். இதனால் அதிக வியர்வை அல்லது தலை சுற்றல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் இது உடலில் வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.
எலுமிச்சை: பலருக்கு லெமன் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், இவை இரண்டையும் சேர்த்து குடிப்பது நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கும். எலுமிச்சையில் விட்டமின் சி சத்து உள்ளது. அதேபோல தேநீரில் காஃபீன் உள்ளது. இவை இரண்டும் சேரும்போது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படலாம்.
வறுத்த உணவுகள்: மழைக்காலம் என்றாலே மக்கள் அதிகமாக டீ மற்றும் நொறுக்குத் தீனி போன்றவற்றை விரும்பி உண்பார்கள். பெரும்பாலானவர்கள் டீயுடன் பொரித்த உணவுகளை சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், இவ்வாறு சாப்பிடும்போது அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக பக்கோடா சாப்பிடும்போது அதில் உள்ள கடலை மாவு நமது உடல் ஊட்டச்சத்து உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே இந்த மூன்று உணவுகளையும் டீயுடன் சேர்த்து சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.