எப்போது பார்த்தாலும் சிலர் காதில் இயர் போனுடனேயே இருப்பார்கள். பேருந்தில் பயணிக்கும்போது அல்லது நடந்து செல்லும்போது என இது போன்றவர்களை ஆங்காங்கே அடிக்கடி பார்க்கலாம். ஒருவர் அதிக நேரம் இயர் போன் பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்கவேண்டி வரும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
வசதிகள் பெருகி விட்டதால் இன்றைய நாகரிக உலகில் அவரவர் வசதிக்கேற்ப இயர்போன், ப்ளூடூத் ஹெட்போன், இயர் பேட்ஸ் என வாங்கி விடுகிறோம். இவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை பற்றி யாரும் அவ்வளவாக உணர்வதில்லை.
சாதாரணமாக காதில் 65 டெசிபல் வரை மட்டுமே ஒலியை கேட்க வேண்டும். ஆனால், இயர்போன்களில் 100 டெசிபல் வரை ஒலித்திறன் உள்ளது. இதனால் தொடர்ந்து அதிகமான சத்தத்தை கேட்கும்போது காது நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நரம்பு செல்கள் தங்களின் உணரும் திறனை இழக்க ஆரம்பிக்கும். அது மட்டுமின்றி, நாளடைவில் இதனால் காது கேட்காமல் போகக் கூட அதிக வாய்ப்புகள் உண்டு.
ஹெட்போன்கள் மின்காந்த அலைகளை உருவாக்குவதால் இதனை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது மூளை நரம்புகள் பாதிக்கப்படும். தொடர்ந்து பல மணி நேரம் காதில் மாட்டிக் கொண்டே இருந்தால் காதின் உணர்வுத் தன்மை குறைந்து விடுவதுடன் செவித்திறனும் குறைந்து போகும். அதிக நேரம் இவற்றைப் பயன்படுத்தும்பொழுது மன அழுத்தம் ஏற்படுவதுடன் மனப்பதற்றமும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் செவித்திறன் குறையாமல் பாதுகாக்க அதிக நேரம் இவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இயர் போன்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் உள்ள ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் வேலை செய்யும்பொழுது அரைமணிக்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எழுந்து செல்வது போல் ஹெட்போன், இயர் போன் பயன்படுத்தும் போதும் தகுந்த இடைவெளி விட்டு பயன்படுத்தலாம்.
முக்கியமாக, இயர்போன்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் காதில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். அதேபோல் காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போன்களை சுத்தம் செய்வதுடன், தூசி அழுக்கு படியாமல் இருக்க சுத்தம் இல்லாத இடங்களில் அவற்றை வைக்காமல் இருப்பதும் நல்லது.
அதிக நேரம் கம்ப்யூட்டர், லேப்டாப்களில் வேலை செய்ய வேண்டி இருந்தால் இயர் போன்களுக்கு பதிலாக ஹெட்போன்களை பயன்படுத்த பாதிப்பின் தன்மை ஓரளவு குறையும்.