காதுகளைக் குடையும் பழக்கம் உள்ளவரா? இதைப் படியுங்க முதலில்!

காதுகளைக் குடையும் பழக்கம் உள்ளவரா? இதைப் படியுங்க முதலில்!

ரு மனிதனுக்கு காதுகள் எவ்வளவு அவசியம் என்பதை உணர அந்த மனிதன் கேட்கும் சக்தியை இழந்து பார்த்தால் தான் தெரியும். காது கேளாதவர்கள் உலகத்தில் மகிழ்ச்சி துக்கம் போன்ற உணர்வுகளின் உடனடி உணர்தல் இன்றி வேதனையை அனுபவிப்பது உண்டு. ஆனால் இந்தக் காதுகளின் அருமையை உணராமல் சிலர் அவர்களுக்கு போரடிக்கும் நேரத்தில்  அல்லது சும்மா இருக்கும் நேரத்தில் அழுக்கு எடுக்கிறேன் என்று ஹேர் பின் அல்லது சுருளான பேப்பர்களைக் கொண்டு காதுகளை நோண்டும் பழக்கமும் கொண்டவர்களாக உள்ளார்கள். கேட்டால் காதுக்குள் சேரும்  அழுக்கை வெளியேற்றுகிறேன் என்பார்கள்.

ஆனால் இது எவ்வளவு ஆபத்தானது என்பது தெரியுமா? காதுக்குள் நாம் அழுக்கு என அழைப்பது ஒரு விதமான மெழுகைத்தான். வெளிப்புறத்தில் இருந்து காது துளைகளுக்குள் நுழையும் தூசிகளை தடுத்து தன்னுள் ஒட்ட வைத்துக்கொள்ள இயற்கையிலேயே ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறைதான் காது மெழுகு என்பது. காதின் நீண்ட பாதையில் உள்ள தோலில் சில தனித்துவம் மிக சுரப்பிகள் உள்ளன. அந்த சுரப்பிகளே இந்த மெழுகுபோன்ற பொருளை உருவாக்குகிறது. காரணம் இன்றி எந்தப் பொருளையும் நம் உடல் அனுமதிக்காது. இந்த மெழுகையும் காரணத்துடனே காதுக்குள் இருத்துகிறது.

       இந்த மெழுகில் ஒட்டிக் கொள்ளும் தூசிகள் செவிப்பறையை எட்டி விடாதபடி பாதுகாத்து நம் கேட்கும் சக்தியை பலப்படுத்தும் விதத்தில் இயற்கை பாதுகாப்புக் கருவியாக செயல்படுகிறது. காது மெழுகு என்பது காதுக்கு குழாயின் உட்பகுதியில் உருவாவதில்லை அதன் வெளிப்பகுதியில் மட்டுமே உருவாகிறது. நாமே சுயமாக சுத்தம் செய்யும்போதுதான் செவிப்பறை அருகேயும் அழுக்குகளினால் மெழுகு போன்ற பொருள் சேர்கிறது. இதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக இயற்கையாக உருவாகும் மெழுகு  ஓரளவு உருவான உடனே உலர்ந்து தானாக வெளியேறிவிடும். கூடவே தூசிகளும் அழுக்குகளும் கூட அதனுடன் ஒட்டிக்கொண்டு வெளியேறிவிடும். ஆனால் காது சுத்தம் செய்கிறேன் என்று நாம் முயற்சி செய்யும்போதுதான் மெழுகு வெளியேறுவதற்கு பதிலாக நம்மால் தள்ளப்பட்டு உட்புறம் சென்று விடும் வாய்ப்பு உண்டாகிறது. மேலும் எதைக் கொண்டாவது அடிக்கடி நம் காதுகளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தால் கேட்கும் சக்தியைத் தரும் மிருதுவான செவிப்பறையும் விரைவில் பாதிப்படையும் சூழல் உருவாகும்.

மேலும் காதுக்குள் உள்ள மெழுகானது அபூர்வமாக சில சமயம் கட்டித்தட்டி காதுகளை அடைத்துக்கொள்வதும் உண்டு. இதனால் கேட்கும் சக்தி குறைய வாய்ப்புண்டு  இதற்கு காது மருத்துவரிடம் சென்றால் அந்த மெழுகை இளக வைக்கும் மருந்துகளை விட்டு அதற்குரிய கருவியை விட்டு லாவகமாக அந்த மெழுகை எடுத்து விடுவார்கள். சுயமாக எண்ணெய்  விடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிலும் முக்கியமாக குழந்தைகளுக்கு காதுகளுக்குள் உள்ள நீரை எடுக்க நினைப்பது முற்றிலும் தவறானது.

சரி? மெழுகானது குறிப்பிட்ட அளவை தாண்டி அடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? காதுக்குள் சத்தம் கேட்பது, காதுகளில் அதீத வலி, கேட்கும் சக்தி குறைவது. அந்த குறைபாடு அதிகமாகிக் கொண்டே செல்வது. காது முழுவதும் அடைத்துக் கொண்டது போன்ற உணர்வு உள்ளிட்டவைகளால் அறியலாம்.

மென்மை உள்ளம் படைத்தவர்களே காதுகளில் உள்ள அழுக்கை எடுக்கிறேன் என்று மென்மையான காதுகளை சேதப்படுத்திக்கொள்ள வேண்டாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com