
சிறுநீரகத்தில் கல் என்பது வாழ்க்கை முறையில் மாற்றம், பருவகால சூழ்நிலை, மோசமான உணவு பழக்க வழக்கங்கள், நீர்ச்சத்து குறைபாடு, உடல் உழைப்பு இல்லாமல் எடை அதிகரித்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது என்கின்றனர் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர்கள்.
சிலருக்கு சிறுநீரகக் கல் மிகச்சிறிய அளவில் இருந்தாலும் சிறுநீரகப்பை மற்றும் சிறுநீர் வெளிவரும் பாதைக்கு இடையில் இருக்கும்போது வலி ஏற்படும். அதாவது, சிறுநீர்ப்பையில் இரத்தக் கசிவு இருக்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு சிறுநீரகக்கல், வலியை ஏற்படுத்தாமல் உள்ளேயே வளரக்கூடும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் சிறுநீரகத்தில் கல் இருப்பதை உறுதி செய்யலாம். மேலும், சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் தேவைப்படலாம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல் இருக்கும் இடம் மற்றும் அளவு போன்றவற்றை துல்லியமாக அறிவது கடினம். ஆனால், சி.டி. ஸ்கேனில் துல்லியமாகப் பார்க்கலாம்.
சிறுநீரில் தொற்று இருக்கிறதா, இரத்தம் கலந்து வருகிறதா என்பதை கண்டறிய கல்சர் பரிசோதனை செய்யப்படும். மேலும், சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்கிறதா என்பதைக் கண்டறிய கிரியாட்டின் (உப்பின் அளவு கண்டறிதல்) சோதனை நடத்தப்படும். பின்னர் சிறுநீரகத்தில் கல் அளவு மற்றும் பாதிப்பை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை வெளியேற்ற எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல், எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் சிறுநீர்குழாய் வழியாகவே கருவியை செலுத்தி கல் எவ்வளவு கடினமாக இருந்தாலும் லேசர் சிகிச்சை மூலம் வெளியேற்றப்படும்.
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் எல்லோருக்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை. 80 சதவீதம் பேருக்கு மருந்து சிகிச்சையே போதுமானது. சிறுநீரகக் குழாயில் சிறு கல்லாக இருந்து, இரண்டு பக்கமும் அடைப்பு ஏற்பட்டால் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடலாம். அப்போதுதான் அறுவை சிகிச்சை தேவைப்படும். எனவே, பரிசோதனைகளை துல்லியமாக மேற்கொள்வது நல்லது. தற்போது சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்ற நவீன சிகிச்சை முறைகள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர் அதிக நாட்கள் ஓய்வு பெறத் தேவையில்லை. அறுவை சிகிச்சை முடிந்த ஓரிரு நாட்களிலேயே அவர்கள் இயல்பாக இருக்கலாம். எனினும், கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதிக உப்பு, மசாலா மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தவிர்க்க முடியும்.