உங்க வயித்துல கேஸ் அதிகமா இருக்கா? உஷார்!

Gas problem in stomach
Gas problem
Published on

ற்காலத்தில் நிறைய பேருக்கு வயது வித்தியாசமின்றி வாய்வு தொல்லை (Gas problem) பிரச்னை அதிகம் உள்ளது. சிலர் வாய்வு பிரச்னைதானே என சாதாரணமாக எண்ணி, சோடா குடித்து ஒரு ஏப்பம் விட்டால் சரியாகும் என்று நினைக்கிறார்கள். வாய்வு பிரச்னையை தொடர விட்டால் மூட்டு வலி, அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் ஆகியவையும் ஏற்படும்.

வாய்வுத் தொல்லை என்பது சாதாரண விஷயம் இல்லை. அந்தக் காலத்தில் நம் பாட்டிமார்கள் எல்லாம் நாம் சாப்பிடும்போது பேசிக் கொண்டிருந்தால், ‘சாப்பிடும் போது பேசாதே. வயிற்றுக்குள் வாய்வு நுழைந்து தொல்லை கொடுக்கும்’ என்பார்கள். அது உண்மைதான். உண்ணும்போது பேசாமல் உண்ணுதல் வேண்டும்.

வாய்வு பிரச்னை ஏற்பட முக்கியமான காரணம் செரிமானமின்மைதான். நாம் உண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால் இந்த பிரச்னை தலைதூக்கும். வாய்வு பிரச்னை இருப்பவர்களுக்கு சோர்வு இருக்கும்.

பசி இருக்காது. அதிக காரமான உணவுகளை உண்பது, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் அதிகம் எடுத்துக் கொள்வது, புகை,மது அருந்துதல் ஆகியவையும் வாய்வு பிரச்னைக்கு முக்கியமான காரணங்கள்.

வாய்வுத் தொல்லை ஏற்படாமல் இருக்க முக்கியமாக செய்ய வேண்டியது:

நேரத்திற்கு சரியாக உண்பது, மோரில் பெருங்காயம் போட்டு சாப்பிடுதல், சீரகத் தண்ணீர் குடிப்பது, அங்காயப் பொடி சாப்பிடுவது, கிழங்கு வகைகள், மொச்சை, பட்டாணி போன்றவற்றை தவிர்ப்பது, ஒரு கப் நீரில் 1 ஸ்பூன் திரிபலா பவுடரை சேர்த்து கொதிக்க வைத்து சிறிது ஆறியதும் வடிகட்டி குடித்து வர வாய்வு மற்றும் வயிற்று கோளாறுகள் சரியாகும். ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் ஓமத்தை கையால் கசக்கி போட்டு நன்கு கொதித்ததும் வடிகட்டி பருக வாயு தொல்லை குணமாகும். இதற்கு நேரமில்லை என்பவர்கள் கடையில் ஓம வாட்டர் என்று கிடைக்கிறது. அதனை வாங்கி 2 ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

வாய்வுத் தொல்லைக்கு அங்காயப் பொடி பெரிதும் நிவாரணம் தருகிறது. இனி, அங்காயப் பொடி எப்படி தயார் செய்வது என்பதைப் பார்ப்போம்.

சுக்கு 5 கிராம், மிளகு 5 கிராம், திப்பிலி 5 கிராம், சுண்டைக்காய் வற்றல் 1 கைப்பிடி, மணத்தக்காளி வத்தல் அரை கைப்பிடி, கறிவேப்பிலை கால் கப், சீரகம் 1 ஸ்பூன், பெருங்காயக் கட்டி சிறு துண்டு, இந்துப்பு தேவையான அளவு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து சிறிது ஆறியதும் இந்துப்பு சேர்த்து பொடித்து ஈரம் இல்லாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்.

இதையும் படியுங்கள்:
தனக்குத் தானே பேசிக் கொள்பவர்கள் எல்லாம் பைத்தியமா?
Gas problem in stomach

தினமும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் அளவு போட்டு சிறிது நெய் விட்டு சாப்பிட, வாய்வுத் தொல்லை சரியாகும்.

-கே.எஸ். கிருஷ்ணவேணி

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com