
கிராமப்புறங்களில் நிறைய வீட்டு வாசல்களில் அழகாக வளர்ந்திருக்கும் மருதாணிச் செடி. குறைந்த அளவு பராமரிப்பிலேயே நன்கு செழித்து வளரும் இந்தச் செடியை தற்போது நகர்ப்புறங்களில் அப்பார்ட்மெண்ட் வாசலில் கூட வைத்து வளர்க்கிறார்கள். இந்தச் செடி வீட்டு வாசலில் இருந்தால், லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து கைகளுக்கு இட்டுக்கொள்ள ஆசைப்படாத பெண்டிரும் உண்டோ? இளம்பெண்கள் கூட இயற்கையாக தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்துகொள்ள மருதாணி இலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அதேசமயம் மருதாணிப் பூக்களின் மகத்துவம் பற்றி பலருக்குத் தெரியாது. மருதாணி பூ மஹாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமான, பிரியமான மலர்களுள் ஒன்று. இதில் நேர்மறை ஆற்றல் அதிகமாக நிறைந்துள்ளது. இந்தப் பூவைக் கொத்தாகப் பறித்து பூஜையறையில் மஹாலக்ஷ்மியின் படத்துக்கு வைத்து வழிபட, கடன் தொல்லை நீங்கும். செல்வச் செழிப்பு ஏற்படும்.
கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரிகிறது இந்த மருதாணிப் பூக்கள். இந்தப் பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி இறக்கி ஆறியதும் பாட்டிலில் சேகரித்து வைத்து, தினசரி தலைக்குத் தடவி வந்தால் நாள்பட்ட தலைவலி நீங்கும். கூந்தல் செழிப்பாக வளரும். மருதாணிப் பூக்களை நிழலில் காய வைத்து, அதோடு செம்பருத்தி இலைகளையும் பூக்களையும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். முடி உதிர்வது நிற்கும். பொடுகு தொல்லை நீங்கும்.
இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் சுகமான தூக்கம் வரும். காலில் தோன்றக்கூடிய தேமல் மற்றும் கரப்பான் புண்களுக்கு மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட, விரைவில் ஆறும்.