.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
கேயென்னே பெப்பர் (Cayenne Pepper) என்பது தமிழில் சிவப்பு மிளகாய் என்று அழைக்கப்படும் ரெட் சில்லியாகும். பிரெஞ்சு கயானா (French Guiana)வில் ஓடும் கேயென்னே ஆற்றின் கரை ஓரங்களில் இந்த காரம் அதிகம் உள்ள மிளகாய் ஆரம்ப காலங்களில் வளர்க்கப்பட்டு வந்ததால் இதற்கு 'கேயென்னே பெப்பர்' என்ற பெயர் வந்துள்ளது. இந்த மிளகாயிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கேயென்னே பெப்பரில் வைட்டமின் C, A, B6, K போன்ற ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இன விருத்திக்கும், பார்வைத் திறனை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்யவும் உதவும். மேலும், நம் நுரையீரல், கிட்னி, இதயம் போன்ற மற்ற உள்ளுறுப்புகளும் சரியான முறையில் இயங்குவதற்கும் இச்சத்துக்கள் உதவி புரிகின்றன.
இந்த சிவப்பு மிளகாயில் உள்ள ஃபிளவனாய்ட்ஸ், கரோட்டினாய்ட்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகிய இயற்கையான தாவரக் கூட்டுப்பொருள்கள் நம் உடலை சில வகை கேன்சர், இதய நோய் போன்ற வியாதிகள் அண்டாமல் பாதுகாக்க உதவி புரிகின்றன.
இந்த மிளகாயில் உள்ள கேப்சைஸின் என்ற பொருள் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்கவும் உதவுகின்றன. இதனால் ஸ்ட்ரோக் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. கேப்சைஸின், ஜீரண மண்டல உறுப்புகளுக்குள் வளரும் நன்மை புரியும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். இதனால் ஜீரணம் சிறப்பாக நடைபெறவும் அதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் வலுப்பெறவும் ஏதுவாகும்.
கேயென்னே பெப்பரில் உள்ள கேப்சைஸின் உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்கவும் உதவும். சக்தி வாய்ந்த இந்த மிளகாயை கூட்டுப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு க்ரீம் ஆர்த்ரைடிஸ் நோயினால் உண்டாகும் வலியைக் குணமாக்க உதவும். வலியுள்ள இடங்களில் சருமத்தின் மீது இந்த க்ரீமை தடவினாலே குணமுண்டாகும்.
இந்த மிளகாயை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும்போது, இந்த மிளகாயில் உள்ள சத்துக்கள் கலோரிகளை எரித்து மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெற உதவும். இதனால் உடல் எடையையும் சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவி புரியும். சிவப்பு மிளகாயில் இத்தனை நன்மைகள் உள்ளதாலேயே இதனை சட்னி, சாம்பார், கூட்டு, பொரியல் என அனைத்து தினசரி உணவுகளிலும் சேர்த்து உட்கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
நாமும் அவர்களைப் பின்பற்றி ரெட் சில்லியை உணவுகளில் அளவோடு சேர்த்து உட்கொண்டு உடல் நலம் பெறுவோம்.