தமிழில் சீமைப் பனிச்சை என்றழைக்கப்படும் பெர்சிம்மன் ஈச்சம் பழம் ஓர் உண்ணத்தக்க பழமாகும். செம்மஞ்சள் நிறம் கொண்ட இந்தப் பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள வைட்டமின் A மற்றும் C யானது ஆரோக்கியமான சருமம் பெறவும், பார்வைத் திறன் மேம்படவும், நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் உதவி புரிகின்றன.
இதிலுள்ள கரையக்கூடிய நார்ச் சத்தானது ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இயங்கவும், ஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்கிறது. சிக்கலின்றி மலம் வெளியேறவும் உதவுகிறது.
பெர்சிம்மன் பழத்திலுள்ள பீட்டா கரோட்டீன் மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் தீங்கிழைக்கக்கூடிய ஃபிரி ரேடிகல்களை அழித்து சமநிலைப்படுத்துகின்றன. இதனால் நாள்பட்ட நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.
இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை நார்மலாக்க உதவுகிறது. மேலும் இது, ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. அதிலுள்ள சில கூட்டுப்பொருட்கள் வாய்வு, வயிற்று உப்புசம், அழற்சி, அஜீரணம் போன்ற கோளாறுகளை குணமாக்க உதவுகின்றன.
பெர்சிம்மன் பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்பானது இதயம் ஆரோக்கியம் பெற உதவுகிறது. பெர்சிம்மன் பழத்திலுள்ள அதிகளவு வைட்டமின் C, உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் தர வல்லது; புற்றுநோய் பரவும் செல்களையும் அழிக்கக் கூடியது.
இந்தப் பழம் இந்தியாவில் இமயமலைப் பகுதியிலும், தமிழ்நாட்டில் குன்னூரிலும் கிடைக்கிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே இப்பழம் கிடைக்கக் கூடியது. கிடைத்தற்கரிய பழமாகையால், குன்னூரில் இதை, ‘ஆதாம் ஏவாள் பழம்’ என்று அழைப்பதாகக் கூறப்படுகிறது.