ரம்புட்டான் (Rambutan) என்பது சுவையான, சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். இது மலேசியாவை பிறப்பிடமாகக் கொண்டு, பின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதில் கார்போஹைட்ரேட், மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B3, C போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
இதிலுள்ள வைட்டமின் C மற்றும் பாலிஃபினால் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலிலுள்ள தீங்கு தரும் ஃபிரி ரேடிகல்களை அழித்து அவற்றை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகின்றன.
வைட்டமின் Cயானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. தொற்றுக்களால் நோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. உடலில் இருக்கும் நோய்களைக் குணமாக்கவும் உதவுகிறது.
இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்கின்றன. சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து, இள வயதிலேயே முதுமைத் தோற்றம் உண்டாவதைத் தவிர்க்கச் செய்கின்றன. சருமத்திற்கு உதவக்கூடிய கொலாஜன் என்ற புரதத்தின் உற்பத்திக்கு துணை நின்று, எலாஸ்ட்டிசிட்டி தன்மையுடன் உறுதியான சருமம் பெற ரம்புட்டான் பெரிதும் உதவுகிறது.
இதில் கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்களும் அதிகம் உள்ளன. அவை எளிதில் ஜீரணமாகி, உடலுக்கு உடனடி சக்தியை அளிக்கக் கூடியவை. இயற்கையான முறையில் சக்தி பெற விரும்புவோர் இப்பழத்தை ஒரு ஸ்நாக்ஸ்ஸாக நினைத்தபோது உண்டு மகிழலாம்.
ஜீரணம், சரும ஆரோக்கியம், உடல் வெப்பநிலைப் பராமரிப்பு போன்ற இயக்கங்களுக்கு உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் நிறைந்திருப்பது அவசியம். ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை உட்கொள்வதால் உடலை நீரேற்றத்துடன் வைத்துப் பராமரிக்க முடிகிறது.
இத்தனை நன்மைகள் கொண்ட ரம்புட்டான் பழத்தை அடிக்கடி உண்போம்; ஆரோக்கியம் காப்போம்.