ரோஸ்மேரி ஒரு நறுமண மூலிகையாகும். இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
செரிமான மேம்பாடு: ரோஸ்மேரி பித்தத்தின் உற்பத்தியை குறைக்கிறது. செரிமானத்திற்கு நன்றாக உதவுகிறது. அஜீரணம் வாயு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
நினைவாற்றல் மேம்பாடு: ரோஸ்மேரி பாரம்பரியமாக மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டுடன் தொடர்புடையது. இதன் வாசனை முகர்வதற்கு இனிமையான நறுமணத்துடன் இருக்கிறது. மேலும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. மன விழிப்புணர்வை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தவை: இதில் ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும், உடல் வீக்கத்தை குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
அழற்சி எதிர்ப்புப் பண்புகள்: இதில் உள்ள சேர்மங்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கீல்வாதம் மற்றும் பிற அழற்சி நோய்களில் இருந்து காக்கின்றன.
முடி வளர்ச்சியை தூண்டுகிறது: ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டவும் முடி உதிர்வதை தடுக்கவும் உதவுகிறது. தொடர்ந்து உபயோகித்து வந்தால் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
மனநிலை மேம்பாடு: ரோஸ்மேரி எண்ணெய் மன அழுத்தத்தை குறைக்கும். மனநிலை மேம்பாட்டிற்கு உதவும். கவலை மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளை போக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நச்சு எதிர்ப்பு: உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற ரோஸ்மேரி பயன்படுகிறது. கல்லீரலின் சிறப்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
கண் ஆரோக்கியம்: ரோஸ்மேரியில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் குறிப்பாக கார்னோசிக் அமிலம் கண்களைப் பாதுகாக்கின்றன. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. வயதானவர்களுக்கு வரும் காடராக்ட் போன்ற பிரச்னைகளை தள்ளிப் போடுவதில் இது உதவுகிறது.
தொற்று நோய்களை தடுக்கிறது: இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளன. நோய்த் தொற்றுகளை தடுக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.
ரோஸ்மேரி இலைகளின் பயன்பாடு: இந்தத் தாவரத்தின் இலை வயிற்று வலி, அஜீரணம் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. இந்த இலையை பறித்து கழுவி விட்டு பச்சையாக உண்ணலாம். ரோஸ்மேரி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை தொடர்ந்து பருகி வருவதால் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகிறது. தலைவலி. ஜலதோஷம் இவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. இது ஒரு பல்துறை மூலிகையாகும். உணவுகளின் சுவையை அதிகரிக்க சமையலில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஃபிரஷ்ஷாக பறித்த ரோஸ்மேரி இலைகளை நறுக்கி அல்லது துண்டுகளாக்கி வறுத்த காய்கறிகள், இறைச்சிகள் மற்றும் சாஸ்களில் சேர்க்கலாம். சூப்புகள் மற்றும் வறுவல்களில் சேர்க்கலாம். ரொட்டி தயாரிக்க உலர்ந்த ரோஸ்மேரி இலைகளை ரொட்டி மாவில் சேர்த்து செய்யலாம். காய்கறிகளுடன் ஒரு சுவையான நறுமணத்திற்காக சில ரோஸ்மேரி துளிர் இலைகளை சேர்ப்பதால் வாசனையாகவும் சத்துள்ளதாகவும் இருக்கும். புதிய ரோஸ்மேரி இலைகளுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது வினிகரை கலந்து ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து காரமான பிஸ்கட்டுகள் செய்யப் பயன்படுத்தலாம்.