நம்மில் பல பேர், மிக அதிகமான அளவில் பதப்படுத்தப்பட்ட (Ultra-processed) சிப்ஸ், க்ராக்கர்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இனிப்பூட்டிய செரியல் போன்ற காலை உணவுகள் ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.
இவ்வாறான உணவுகள் விற்பனைக்கு வரும் முன், அவை நீண்ட நாட்கள் கெடாமலிருக்கவும், கவர்ச்சிகரமான தோற்றமளிக்கவும், சுவை கூட்டவும் போன்ற பல காரணங்களுக்காக அவற்றுடன் செயற்கை நிறமூட்டி, சுவையூட்டி என கெமிக்கல்களை சேர்த்து பதப்படுத்திய பின்னரே விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இப்படிப்பட்ட உணவுகளை நாம் அடிக்கடி உண்பதால் உடலுக்கு என்னென்ன ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சில வகை உணவுகளை அதிகமாகப் பதப்படுத்தப்படும் செயலுக்கு உட்படுத்தப்படும்போது உணவுப் பொருட்கள் அவற்றிலுள்ள நார்ச்சத்தையும் மற்ற முக்கியமான ஊட்டச் சத்துக்களையும் இழக்கின்றன. இது போன்ற உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் சேர்க்கப்படுவதால் இவை உடல் எடை அதிகரிக்கவும், இதய இரத்த நாளங்களில் கோளாறுகளை உண்டுபண்ணவும் வாய்ப்பு உண்டாக்கக்கூடியவையாக உள்ளன.
அதிகமாகப் பதப்படுத்தப்படும் உணவுகள் விரைவில் திருப்திப்படும் உணர்வைத் தருவதில்லை. இதனால் இவற்றை அதிகளவில் உட்கொண்டு ஒபிஸிட்டியை வரவழைத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
இம்மாதிரியான உணவுகள் ஜீரண மண்டல உறுப்புகளில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் மீது எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்க காரணியாகின்றன.
ஊட்டச் சத்துக்கள் நீங்கி, அதிகளவு இரசாயனப் பொருட்கள் சேர்ந்து முழுவதுமாக மூலப்பொருளின் குணங்கள் மாற்றப்படுவதால் மெட்டபாலிசம், ஜீரணம் உள்ளிட்ட உடலின் எல்லா செயல்பாடுகளிலும் குறையேற்படும் அபாயம் உண்டாகிறது. ஒபிஸிட்டி, டைப் 2 நீரிழிவு நோய், இரத்த நாளங்களில் கோளாறு ஆகிய நோய்கள் தோன்றவும் இதுபோன்ற உணவுகள் வழிவகுக்கின்றன.
எனவே, இப்படி அதிகமாகப் பதப்படுத்தப்படும் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தைக் குறைத்து எப்பொழுதும் ஃபிரஷ்ஷான உணவுகளை உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் நம் உடல் நல்ல ஆரோக்கியம் பெறும்.