குழந்தைகள் தூக்கத்தில் பற்களை கடிப்பதையும், வளரும் பருவத்தில் சிறுவர்களும் பற்களைக் கடிப்பதையும் கேள்விபட்டிருப்போம். பார்த்திருப்போம். வயிற்று பூச்சி, பயம் என அதன் காரணங்களாக சொல்லப்படுகின்றன. பெண்களிடத்தும் தூக்கத்தில் பற்களை நறநறவென கடிப்பதை பார்க்கலாம். இதை, ‘ப்ருக்ஸிஸம்’ என மருத்துவர்கள் சொல்வார்கள்.
இது மன அழுத்தத்திற்கான அறிகுறி. மனக்கவலைகளுக்கு வடிகால் இல்லாமல்போனால் இப்பிரச்னை வருவதாகச் சொல்கின்றனர். வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என பல்வேறான மன அழுத்தங்களுக்கு தீர்வு காண முடியாமல் மனதுக்குள்ளேயே வைத்து கவலைப்படும்போது, தூக்கத்தில் அவர்கள் பற்களை கடிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
பொதுவாக, டீன் ஏஜ் பருவத்தில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை உள்ளதாம். இவர்கள் மன அழுத்தத்திற்கு தேர்வு பயம், காதல் தோல்வி, எதிர்காலம் குறித்த அச்சம் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பற்கள் தொடர்ந்து இப்படி கடிபடுவதால் நாளடைவில் கீழ்தாடையின் முன்பற்கள் தேய்ந்து, கூச ஆரம்பித்து விடும்.
எந்தவொரு இனிப்பான, சூடான பொருட்களை சாப்பிட முடியாது கஷ்டப்படுவார்கள். பல நாட்கள் இப்பிரச்னை தொடர்ந்தால் தாடையில் சதைகள் இறுகி முகத்தின் அமைப்பே குலைந்து விடும். தாடை எலும்பை மண்டையோட்டோடு இணைத்திருக்கும் மூட்டு பகுதியும் பாதிக்கப்பட்டு வலி உண்டாகும்.
தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தற்காலிக தீர்வாக சாஃப்ட் ஸ்ப்லிண்ட் என்ற க்ளிப்பை பயன்படுத்தலாம். படுக்கும்போது மட்டும் இதை பற்களில் பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பற்களின் கீழ்தாடையும், மேல் தாடையும் ஒட்டாமல் உரசாமல் தடுக்கலாம்.
ஆனாலும், இது நிரந்தர தீர்வல்ல. மன அழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து அதை சரி செய்ய முயல வேண்டும். பிறகே இப்பிரச்னை முழுவதும் சரியாகும். இதற்கு நல்ல மனநல ஆலோசகர், மருத்துவரை பார்த்து அவர்களின் வழிகாட்டுதலில் பயிற்சிகள் மேற்கொள்ள நல்ல பலன்களைப் பெறலாம்.
யோகா, தியானம் போன்ற இயற்கை சூழலில் நேரத்தை செலவிட இப்பிரச்னையை கட்டுப்படுத்தலாம்.