
மனிதர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் கண்ணீர். மன உளைச்சலின்போது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை வெளியேற்றுவதற்கான ஒரு உயிரியல் செயல்பாடுதான் கண்ணீர். திரைப்படம் மற்றும் டி.வி சீரியலில் சோகமான காட்சிகளைப் பார்க்கும்போதும், மன வருத்தம், கவலை கொள்ளும்போதும், பிறருடைய துயரத்தைப் பார்க்கும்போதும் ஒரு மனிதனுக்கு அவனை அறியாமல் கண்ணீர் வருகிறது. ஒருவர் அழுவதன் மூலம் தனக்கு அருகில் இருக்கும் மக்களுக்கு தாங்கள் துயரத்தில் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறார். மேலும், அழுவதன் மூலம் ஒருவர் தனது மனக்காயத்தை ஆற்றிக்கொள்கிறார் என அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். கண்ணீர் என்பது மூன்று வகைப்படும். அவை: அடித்தள கண்ணீர், எரிச்சல்களை நீக்கும் கண்ணீர், உணர்ச்சிபூர்வமான கண்ணீர்.
அடித்தள கண்ணீர் (Basal tears): நம் கருவிழிக்கு ஊட்டமளிப்பதற்கும், அதை பாதுகாப்பதற்கும் எப்போதும் கண்களின் அடித்தளத்தில் கண்ணீர் இருக்கும். அது, ‘பேஸல் டியர்ஸ்’ எனப்படுகிறது. இது தெளிவான பார்வைக்கும், பார்க்கும் பொருளை சரியாக போக்கஸ் செய்வதற்கும், கண்களை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. இந்தக் கண்ணீர் ஆக்சிஜன், நியூட்ரியன்ட்ஸ் போன்றவற்றை கண்கள் முழுவதும் பரப்புகிறது
எரிச்சல்களை நீக்கும் கண்ணீர் (Reflex tears): வெங்காயம் உரிக்கும்போது நமது புருவத்தின் அடியில் இருக்கும் சுரப்பிகளில் இருந்து வெளிவருகிறது இந்தக் கண்ணீர். புகை, தூசி அல்லது ஒவ்வாமை போன்ற எரிச்சலூட்டும் பொருட்களுக்கான எதிர்வினையாக இது செயல்படுகிறது. இந்த வகை கண்ணீர், பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபாடிகளைக் கொண்டிருக்கும்.
உணர்ச்சிக் கண்ணீர் (Emotional tears): மகிழ்ச்சி, சோகம், பயம் மற்றும் பிற உணர்ச்சி நிலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக உணர்ச்சிக் கண்ணீர் உருவாகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிறர் மேல் பரிதாபம், பச்சாதாபம் காட்டும்போதும், கடுமையான உடல் வலியின்போதும், கடுமையான மன உளைச்சலின்போதும் இந்த கண்ணீர் சுரக்கிறது. மன அழுத்த ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த இந்த உணர்ச்சிகரமான கண்ணீர் உதவுகிறது.
கண்ணீரில் உள்ள ரசாயனங்கள் மற்றும் அடுக்குகள்: கண்ணீரில் உப்புகள் ஆன்டிபாடிகள், ஆன்டிபாக்டீரியல் என்சைம்கள் எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவை உள்ளன. கண்ணீர் லிப்பிட், அக்வஸ் மற்றும் சளி என்ற மூன்று அடுக்குகளால் ஆனது. மொத்தக் கண்ணீரையும் கண்ணில் கட்டி வைத்திருக்கும் உள் சளிப்படல அடுக்கு, கண்ணை நீரேற்றமாக வைத்திருக்கவும், பாக்டீரியாவை விரட்டவும் மற்றும் கருவிழியைப் பாதுகாக்கவும் நீர் நிறைந்த நடுத்தர அடுக்கு (தடிமனான அடுக்கு), கண்ணீரின் மேற்பரப்பை கண்ணுக்குத் தெரியும்படி மென்மையாக வைத்திருக்கவும், மற்ற அடுக்குகள் ஆவியாகாமல் தடுக்கவும் வெளிப்புற எண்ணெய் அடுக்கு என கண்ணீரில் மூன்று அடுக்குகள் செயல்படுகின்றன.
கண்ணீர் விடுவதன் நன்மைகள்: உணர்ச்சிபூர்வமான கண்ணீர் சமுதாயத்தில் நமக்கு ஒரு நல்ல அந்தஸ்தை பெற்றுத் தருகிறது. உறவுகளை மேம்படுத்துகிறது. பிறருடைய அனுதாபத்தை சம்பாதிக்க, பிறரின் கோபத்தை சாந்தப்படுத்த, மோசமான சூழ்நிலையை இனிதாக்க, மனக்காயங்களை ஆற்ற கண்ணீர் உதவுகிறது.