‘பிபிம்’ என்றால் மிக்ஸிங் என்றும் ‘பாப்’ என்றால் சமைத்த அரிசி உணவு என்றும் கொரியன் மொழியில் கூறப்படுகிறது. பிபிம்பாப் (Bibimbap) என்றால் சூடான அரிசி சாதத்தை ஒரு பௌலில் வைத்து அதன் மீது வேக வைத்த காய்கறிகள், முட்டை, இறைச்சித் துண்டு அல்லது டோஃபு ஆகிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரிவிகிதத்தில் வரிசையாக வைத்து கடைசியாக அதன் மீது சிறிது எள் விதைகளைத் தூவி, இனிப்பு, புளிப்பு, ஸ்பைஸஸுடன் கூடிய சுவையான கோச்சுஜங் என்னும் ஸாஸுடன் மதிய உணவாக உண்ணப்படும் ஒரு கொரியன் அரிசி உணவாகும். பிபிம்பாப் ரைஸ் பௌலை எப்படித் தயாரிப்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வேக வைத்த ஒயிட் ரைஸ் அல்லது பிரவுன் ரைஸை ஒரு பௌலில் முதலில் பரத்தி வைக்கவும். ஸ்டிர் ஃபிரை அல்லது சாட் (saute) செய்த பசலைக் கீரை, கேரட், ஸுச்சினி, காளான் மற்றும் முளை கட்டிய பீன்ஸ் போன்றவற்றை ரைஸ் மீது ஒரு பக்கத்தில் வைக்கவும். மரினேட் செய்து சமைத்த சிக்கன் அல்லது டோஃபு அல்லது டெம்பே (tempeh) போன்றவற்றில் ஏதாவதொன்றை புரோட்டீன் சத்துக்காக பௌலில் சேர்க்கவும். பிபிம்பாப்பின் டெக்ச்சர் மற்றும் ஆரோக்கியத்தின் அளவைக் கூட்ட, வேக வைத்து நறுக்கிய முட்டை மீது மிளகுத்தூள் சேர்த்து மற்ற உணவுகளுடன் வைக்கவும்.
கடைசியாக, ஸ்பைசஸ், நல்லெண்ணெய், சர்க்கரை, வினிகர் சேர்த்து தயாரிக்கப்பட்ட சுவை நிறைந்த கோச்சுஜங் ஸாஸை ரைஸ் பௌலில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுகளின் மீது தெளித்தாற்போல் கலந்து விடவும். இப்போது பிபிம்பாப் ரைஸ் பௌல் உண்பதற்கு ரெடி. உண்பதற்கு முன் கோச்சுஜங் சாஸ், காய்கறிகள், முட்டை, புரோட்டீன் உணவுகள் ஆகிய அனைத்தையும் சாதத்துடன் நன்கு கலக்குமாறு ஒரு ஸ்பூனால் கலந்து விட்டு அதன் பின் உண்ண ஆரம்பிப்பதே சரியான முறையாகும். ஏனெனில், பிபிம் என்ற வார்த்தையே மிக்ஸிங் என்ற பொருளைத்தானே தருகிறது!
உடலுக்குத் தேவையான கார்ப்ஸ், புரோட்டீன், கொழுப்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என அனைத்துச் சத்துக்களையும் தன்னுள் அடக்கிய இந்த பிபிம்பாப் ரைஸ் பௌலை நாமும் தயாரித்து உட்கொண்டு குறைவற்ற ஆரோக்கியம் பெற்று நிறைவாக வாழ்வோம்!