சில நேரங்களில் நம் உடலானது வேலைப் பளு, சரியான தூக்கமின்மை, பிரச்னைகள், கவலைகள் போன்றவற்றில் ஏதாவதொரு காரணத்தால் பலமின்றி சோர்வடைந்து காணப்படும். அந்த மாதிரியான நேரங்களில் சில வகைப் பழங்களை உட்கொண்டால் உடல் சோர்வு நீங்கி, உடனடி சக்தி பெற்று புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்படையும். அவ்வாறான பழங்கள் எவையென இந்தப் பதிவில் பார்ப்போம்.
மாதுளம் பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்களும் வைட்டமின் C யும் உள்ளன. அதை உண்பதால் உடல் முழுவதும் உடனே சக்தி பெறுவதுடன் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
பியர்ஸ் (Pears) பழத்தில் அதிகளவு வைட்டமின்களும் ஆன்டி ஆக்சிடன்ட்களும் உள்ளன. அதோடு, நார்ச்சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. இவை செரிமானம் சிறப்பாக நடைபெற உதவி புரிந்து உடலுக்குத் தொடர்ந்து சக்தியை வழங்கிக் கொண்டிருக்கும்.
ஆப்பிள் பழத்திலும் நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிறைவுற்றிருக்கும் உணர்வைக் கொடுத்து சக்தியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும். இதிலுள்ள இயற்கையான இனிப்புச்சத்து உடனடி சக்தி அளிப்பதில் சூப்பர் ஹீரோ.
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் B6 அதிகம் உள்ளது. இவை உடலுக்கு தொடர்ந்து சக்தியை வழங்கிக் கொண்டிருப்பதோடு, இரத்த சர்க்கரை அளவையும் சமநிலையில் நிறுத்திப் பராமரிக்க உதவி புரிகின்றன.
ஆரஞ்சு, கிரேப், க்ளெமென்டைன் (Clementine) போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் வைட்டமின் C அதிகம் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடனடி சக்தியையும் உடலுக்கு வழங்குகிறது.