‘ஸ்மார்ட் ஃபோன் விஷன் சிண்ட்ரோம்’ என்றால் என்னவென்று தெரியுமா?

‘ஸ்மார்ட் ஃபோன் விஷன் சிண்ட்ரோம்’ என்றால் என்னவென்று தெரியுமா?

ற்காலத்தில் மொபைல் ஃபோன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அதிலும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடுகள் தற்போது அதிகமாகவே உள்ளது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பெல்லாம் நமது ஆண்ட்ராய்டு ஃபோனில் டேட்டா பயன்பாடு ஒரு மாதத்துக்கு 250 எம்பி என்ற கணக்கில்தான் இருந்தது. ஆனால், தற்போது ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி மூன்று ஜிபி என்று ஒவ்வொருவரும் தன்னுடைய செல்ஃபோனில் வைத்திருக்கிறார்கள். அதிலும் வீட்டிலோ அலுவலத்திலோ ஃபைபர் நெட் வசதி இருந்தால், எல்லா நேரமும் தங்கு தடையற்ற டேட்டா சேவை கிடைக்கிறது. அந்த டேட்டாவை வீணாக்கக் கூடாது என்ற காரணத்துக்காகவே அதிகமாக ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துகிறோம்.

ஸ்மார்ட் ஃபோன் விஷன் சிண்ட்ரோம்: ஸ்மார்ட் ஃபோன் விஷன் சிண்ட்ரோம் என்பது கணினிகள், ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது டேப்லெட்டுகளை நீண்ட காலமாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. இது கண்களின் பார்வை சக்தியை முடக்கிவிடும். இது, ‘டிஜிட்டல் விஷன் சிண்ட்ரோம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இரவில் விளக்குகளை அணைத்து விட்டு இருட்டறையில் ஸ்மார்ட்  ஃபோன் பயன்படுத்தும்போது அதன் விளைவுகள் அச்சம் தரக்கூடியதாக இருக்கின்றன. விழித்திரையை பாதித்து கண் பார்வைக் குறைபாடு, தலைவலி, கண்களில் ஈரப்பதம் குறைந்து எரிச்சல், அத்துடன் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கும் வழி வகுக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுதிர்குமார் என்பவர் தனது ட்விட்டரில், பல மணி நேரம் ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்திய பெண் ஒருவருக்கு, ‘ ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம்’ இருப்பது கண்டறியப்பட்டது குறித்தும், அவர் எப்படி கடுமையான பார்வை குறைபாட்டுக்கு ஆளானார் என்பதையும், ஒன்றரை வருட சிகிச்சையின் பின்னரே அவர் அந்த பாதிப்பிலிருந்து மீண்டார் என்பதையும் விரிவாக விளக்கியிருந்தார் 

20 – 20 - 20 விதி: தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டை நம்மால் முழுவதுமாக தவிர்க்க முடியாது. ஆனால், பயன்படுத்தும் கால அளவைக் குறைக்கலாம். 20 - 20 - 20 விதியை நாம் கடைபிடிக்கலாம்.  20 நிமிடங்கள் ஃபோனை பயன்படுத்திய பிறகு 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும்.

இரவில் போனை ரீடிங் மோடில் போட்டுக்கொண்டு பார்க்கலாம். அதில் பட்டிமன்றம், பேச்சாளரின் உரைகள், ஆடியோ கதைகள் போன்றவற்றைக் கேட்கும்போது ஃபோனை நம் கைகளில் வைக்காமல் தள்ளி வைத்து ஏதாவது வேலை செய்தபடியே கேட்கலாம். ஸ்கிரீனை உற்றுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. தூங்கும்போது நமது படுக்கைக்கு பக்கத்தில் கண்டிப்பாக மொபைல் போன் வைக்கக் கூடாது. படுக்கையில் இருந்து 20 அடி தள்ளி வைக்க வேண்டும். அளவோடு ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தையும் பேணுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com