தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் செல்போன், லேப்டாப், டேப், கம்ப்யூட்டர் போன்றவை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. வேலை காரணமாகவும் இதுபோன்ற சாதனங்களை தினம் தினம் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தொடர்ந்து அதிக நேரம் இதுபோன்ற சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பும், அவற்றை போக்கும் வழிமுறைகளையும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நீண்ட நேரமாக நம்முடைய தலையை அதிகமாக கீழே குனிந்து பார்ப்பதன் மூலம் வரக்கூடிய பிரச்னைதான் Tech neck syndrome ஆகும். தலையை 60 டிகிரி கோணத்தில் சாய்த்து லேப்டாப், போன் போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பதே இந்தப் பிரச்னைக்குக் காரணம்.
நகரத்தைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுடையவரையே இந்த பிரச்னை அதிகம் பாதிக்கிறது. தகவல் தொழில்நுட்பம், வங்கி போன்றவற்றில் வேலை செய்தவர்களுக்கே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக கேட்ஜெட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படுகிறது.
டெக் நெக் சிண்ட்ரோம் மூலம் கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கம் அடையும். கழுத்தில்தான் தசைகள் மற்றும் மூளைக்குச் செல்லும் நரம்புகளும் உள்ளன. அதனால் கழுத்தை வெகுநேரம் இறுக்கமாக வைத்திருக்கும்போது இவை பாதிப்படையும். இதனால் கழுத்தில் வலி ஏற்படும், கழுத்தை திருப்ப முடியாது, வலி இருப்பதால் தூக்கம் வராது, இதுவே நாளடைவில் டிப்ரெஷனில் கொண்டு சென்றுவிடும். இப்படித் தொடர்ந்து செய்துக்கொண்டிருப்பதால் முதுகில் கூன் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
இந்தப் பிரச்னை ஏற்பட சில காலம் ஆகலாம். ஒரு நாளில் ஏற்படாவிட்டாலும், மெல்ல கழுத்து வலி வர ஆரம்பிக்கும். இந்த வலி கழுத்து, முதுகுத்தண்டு, தோள்பட்டை போன்ற இடங்களில் பரவும். எந்தக் கையில் போன் வைத்துப் பயன்படுத்துகிறோமோ? அந்தக் கையில் அதிக வலி ஏற்படும், விரல்கள் மரத்துப்போவது போன்ற பிரச்னை, மூச்சு விடுவதில் பிரச்னை, தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
இந்தப் பிரச்னையை போக்குவதற்கான வழிமுறைகள், முதலில் அதிகமாக போன் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. நம்முடைய உயரத்துக்கு ஏற்றாற்போல டேபிளை அமைத்து நம் கண் பார்வைக்கு நேராக போன், லேப்டாப், டேப் போன்றவற்றை வைத்து பயன்படுத்தலாம். 30 நிமிடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற சாதனங்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. கழுத்திற்கு சின்ன சின்ன Exercise, massage செய்வது நல்லது. கழுத்தில், தோள்பட்டையில் ஹாட்பேக் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கழுத்து நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கழுத்து தசையின் இறுக்கமும் குறையும்.
எதிர்காலத்தில் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பாதிப்புகள் அதிகமாகக்கூடும் என்று சொல்லப்படுகிறது. எனவே, இதுபோன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.